பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநாவுக்கரசர்

309


தால் அழியுமல்லவா? இதை அறிந்துணரும் ஆற்றல் ஆமைக்கு இல்லை. ஆமைக்குத்தான் இல்லையா? ஆறறிவு படைத்த மனிதனுக்கு உண்டோ? வாழ்க்கையே இவ்வுலகம் என்ற ஒர் அடுப்பு. அவ் அடுப்பில் ஆசை என்ற தீ எரிகிறது. உணர்வாகிய நீர் மனிதன் பெற்ற சிறுபொழுது இன்பமே இளஞ் சூடுடைய வெந்நீர். இதனையே நிலையெனக் கருதித் திளைத்து மகிழ்ந்து விளையாடுகிறான் மனிதன். ஆனால் அவன் பெற்றதோ நிறை இன்பமல்ல. அவன் பெற்றது துன்பத்திற்குக் காரணமாய், இன்பம் போலத் தோற்றிய துன்பமே என்று விளக்க,

உலையை யேற்றித் தழலெரி மடுத்த நீரில்
திளைத்து நின்றாடுகின்ற ஆமைபோல் தெளிவிலாதேன்
இளைத்து நின்றாடுகின்றேன்,

என்பார், அப்பரடிகள்.

அப்பரடிகள், பழமொழிகளைக் கொண்டு அறநெறிகளை விளக்குபவர்.

இறைவன் கருணையை நினைந்து, நெஞ்சு நெகிழப் பாடுபவர். உயிர் அருவப்பொருள்; அதற்கு ஒர் உருவத்தைத் தந்து, உலகிடை அனுப்பித் துய்ப்பன துய்த்து, மகிழ்வன மகிழ்ந்து - குறைநீங்கி நிறைநலம் பெறச் செய்யும் கருணையே கருணை. இதனை,

என்பிருத்தி நரம்புதோல் புகப்பெய் திட்டு
என்னையோ குருவ மாக்கி

என்று பாடுகிறார். இந்த உருவமாக்கிய பணிக்கு ஈடாக எதனைக் கூறமுடியும்? இந்த உருவத்தினை முதலாகக் கொண்டுதானே மனிதன் வளர்கிறான்! வரலாறு படைக்கிறான்? உலகில் வேறு எந்த அறிவியல் படைப்பையும் விட இந்த மானுட யாக்கையின் படைப்பு அதி நுட்பமானது; அறிவியல் தன்மையுடையது; இந்த உடல்-உயிர்க்கூட்டின் பயன் உயிரை இன்புறுத்தலேயாம். இறைவன் திருவுள்ளம்