பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

164

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


முனைப்பால் ஏற்பட்ட முரண்பாடுகள் அல்ல. அனைவரும் ஒருமைப்பாடுடைய சிந்தையினர்; ஆதலால் அவர்கள் "உடனுறைவின் பயன் பெற்றார்" என்று சேக்கிழார் விளக்குகின்றார்.

திருப்பதிகச் செழுந்தமிழின் திறம் போற்றி
மகிழ்வுற்றுப்
பொருப்பரையன் மடப்பாவை இடப்பாகர்
பொற்றாளில்
விருப்புடைய திருத்தொண்டர் பெருமையினை
விரித்துரைத்து அங்கு
ஒருப்படுகிந் தையினார்கள் உடலுறைவின் பயன்
பெற்றார்.


என்பது சேக்கிழார் திருப்பாடல். இங்ங்னம் வீட்டிலும், நாட்டிலும் உடனுறைவின் பயன் எய்தி வாழ்கின்ற பண்பாடுடைய வாழ்க்கை தோன்ற வேண்டும்.

இறைவனைச் சடங்குகளால் மகிழ்விக்க இயலாது; "பொக்கமிக்கவர் பூவும் நீரும் கண்டு நக்குநிற்பவன்" பெருமான். கல்லடியும் செருப்படியும் ஏற்று மகிழ்பவன். சிவகோசரியாரின் வழிபாடு விதிமுறையைச் சார்ந்ததுதான்்; கண்ணப்பரின் வழிபாடு ஆகம விதி முறைகளை மீறியதுதான்்! ஆனால், கண்ணப்பரின் வழிபாடே இறைவனுக்கு உவப்பாக இருந்தது. மாமன்னன் கட்டிய கருங்கல் கோயிலினும் பூசலார் கட்டிய மனக்கோயிலே இறைவனுக்கு உவப்பையளிக்கிறது. இறைவனை நாள் தோறும் வணங்கினால் என்ன? கோடி அருச்சனை செய்தால் என்ன? வழிபாடு அகம் நிறைந்த அன்பினின்று எழுந்ததாக இல்லாது போனால் பயனில்லை.

வானவர்கள், இறைவனை வாழ்த்தத்தான் செய்கின்றனர். வானவர்கள், பதவி அதிகாரப் பித்துப் பிடித்து அலைபவர்கள்; அவற்றைக் காப்பாற்றிக் கொள்வதற்கும்