பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெரியபுராணச் சொற்பொழிவுகள்

41


பொருந்திய வளமார் தோழராகப் பெற்றார்; வாழ்க்கை பெற்றார். ஆனால், சிவபெருமானோ யாதும் பெற்றாரல்லர். தோழமை என்பது வாணிகமன்று. ஒன்றைப் பெறுதற்காகவே நட்புக் காட்டுவது, நட்பாகாது; தோழமையுமாகாது. அது தொல்லையைத் தரக்கூடிய சதியாகும். சுந்தரர், சிவபெருமானைத் தோழமையாகப் பெற்றது, ஒன்றைப் பெற்றுவிட வேண்டும் என்று திட்டமிட்டுச் செய்ததன்று. தோழமை கனிந்தது! நட்பு வளர்ந்தது! சுந்தரருக்குத் தேவைகள் தோன்றின. அப்போது தேவையை நிறைவேற்றக் கூடிய பேராற்றல் தம்முடைய தோழனுக்கு இருந்ததால், கேட்டுப் பெற்றார். சுந்தரர் விரும்பிய வெல்லாம் தந்தருளித் தோழமை காட்டினான் சிவபெருமான்! கழுது கண் படுக்கும் பானாளிரவில் காரிகைபால் தோழனுக்காகத் துது சென்ற கண்ணுதற் பெருமானின் தோழமைப் பண்பை என்னென்று கூறுவது! சுந்தரர் வரலாறு முழுதும் நட்பின் இயல்புகளைச் சேக்கிழார் விரித்துப் பேசியுள்ளார். அதனைப் படித்து உணர்தலே நல்லது.

பெரியபுராணம் காட்டும் மனையறம்

பெரியபுராணம், தவத்திற் சிறந்த சீலர்களின் வரலாற்றைத்தான்் பேசுகிறது. ஆனால், இங்குத் தவமென்பது, தமிழகத்தில் காலத்தால் பின்னே வந்த இயற்கையோடியை பில்லாத தவமன்று, துய்ப்புணர்வுக்குரிய பொருள்களிலிருந்து அகன்று நின்று. "அவா அறுத்தேம்" என்பது பொய்யுரையே யாம். பொருளுடையவராக இருந்தும் அதனிடத்துப் பற்றின்றிப் பலருக்கும் பகுத்துப் பயன்பட வாழ்தலே சீலத்தில் சிறந்த தவநெறியாகும். தண்ணிரில் கிடக்கும் தாமரை தான் தண்ணிர் ஒட்டாமல் வளர்கிறது. தாமரையிலைமேல் தண்ணிர் கிடந்தாலும் தண்ணிர் அகற்றப்படும் பொழுது, அந்த இலைக்கு வடுக்களோ அல்லது வற்றாத பசையெனப்படும் ஈரமோ ஏற்படுவதில்லை.