பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

டாக்டர்.எஸ்.நவராஜ் செல்லையா


4.2. மலையிலே நெருப்பு! ஓடு ஓடு (Fire on the Mountain)

விளையாட வந்திருப்பவர்களின் எண்ணிக்கைக்கு ஒன்று குறைவாக, மைதானத்தில் சிறு சிறு வட்டம் போட்டிருக்க வேண்டும். அதாவது 50 பேர்கள் இருந்தால் 49 வட்டங்கள் போட்டிருக்க வேண்டும்.

ஒவ்வொரு வட்டத்திலும் ஒருவர் நின்று கொண்டிருக்க, வட்டம் இல்லாத ஒருவர், 10அடி தூரத்திற்கு அப்பால் நின்று கொண்டிருக்க, ஆட்டம் ஆரம்பிக்கும்.

சைகை கிடைத்தவுடன், வட்டம் இல்லாதவர், மலையிலே நெருப்பு ஒடு ஓடு என்று கத்திக் கொண்டே இருப்பார். எல்லோரும் அவர் இருக்கும் இடத்தை நோக்கி ஓடி வர வேண்டும். தன்னிடம் எல்லோரும் வந்தவுடன், தொடர்ந்து மற்றவர்களுடன், ஓட, கத்தியவரும் கூட ஓடி வருவார்.

குறிப்பிட்ட ஒரு இடம் வந்தவுடன், கத்திக் கொண்டே இருந்தவர், நெருப்பு அணைந்து விட்டது என்று மீண்டும் குரல் கொடுக்க வேண்டும்.

இப்படிக் கத்தியவுடனேயே, பயந்து ஓடி வந்த எல்லோரும் மீண்டும் தாங்கள் நின்று கொண்டிருந்த வட்டம் நோக்கி ஓடி, ஏதாவது ஒரு வட்டத்திற்குள் போய் நிற்க முயற்சிக்க வேண்டும்.