பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


ஏனையோரைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாது தன்னலம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு தாம் விரும்பிய தெய்வத்தை வழிபட்டு வருவதனையும் உலகியலிற் காண்கின்றோம். தமக்கு மாறாயினார் அழிந்தொழிதல் வேண்டும் எனத் தெய்வத்தினைக் குறித்து மந்திரச் சடங்குகளைச் செய்யும் தீய எண்ணமுடையவர்களும் சிலருளர். இவ்வாறு தம்மைப் போன்று தம்மால் வழிபடப் பெறுந் தெய்வங்களும் விருப்பு வெறுப்புடையனவாய்ச் சிறுமையுடையனவாக வைத்து வழிபடப் பெறும் தெய்வங்கள் யாவும் சிறு தெய்வங்களாகவே கருதப்படுவன வாயின.

நிலத்தின் வளத்தால் இயல்பாகத் தோன்றி வளர்ந்த தாவரங்களின் காய்கனி முதலியவற்றையும் விலங்கு பறவை முதலியவற்றை வேட்டைத் தொழிலாற் கொன்று பெற்ற இறைச்சியையும் உணவாகக் கொண்டு நாகரிகமின்றி வாழ்ந்த பண்டைக்கால மாந்தர்கள், மழை இடி மின்னல் சூறைக் காற்று கடல்கோள் காட்டுத்தி நிலநடுக்கம் முதலிய ஐம்பூத நிகழ்ச்சிகளுக்கும், புலி சிங்கம் முதலிய கொடிய விலங்குகட்கும் பாம்பு தேள் முதலிய நச்சுயிர்கட்கும் இறந்தோர் ஆவிகட்கும் அச்சுறுத்துமியல்பினவாகத் தாம் நம்பிய பேய பூதம் முதலியவற்றிற்கும் அஞ்சிய நிலையில் அவ்வச்சத்தின் விளைவாக அவற்றைத் தெய்வமெனக் கொண்டு நிகழ்த்திய வழிபாடுகள் சிறு தெய்வ வணக்க மெனப்படும். கொல்லுந் தன்மையவாகிய எல்லாவற்றையும் தெய்வமெனக் கொண்டு அவை தம்மை வருத்திக் கொல்லாத வாறு அவற்றுக்கு ஆடு கோழி முதலிய சிற்றுயிர்களைப் பலியிட்டு ஊனும் கள்ளும் படைத்து வழிபடும் முறையில் நிகழ்த்தப்பெறும் இவ்வழிபாடுகள் சிறு தெய்வ வழிபாடுக ளெனப்படும்.

எங்கும் நிறைந்துள்ள மெய்ப்பொருளாகிய கடவுள், உலகுயிர்கள்தோறும் நீக்கமற நிறைந்துள்ள நிறைவு நிலையினையும் எல்லாப்பொருள்களையுந் தன்னகத்து அடக்கிக் கொண்டு எல்லாப் பொருட்கும் பரவியுள்ள விரிவு நிலையினையும் எண்ணி எவ்வுயிரும் நீங்காதுறையும்