பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/498

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவள்ளுவர் கூறும் வாழ்க்கை நெறிமுறைகளும் . . .

489


“கண்டவர் இல்லென உலகத்துள் உணராதார்

தங்காது தகைவின்றித் தாஞ்செய்யும் வினைகளுள் நெஞ்சறிந்த கொடியவை மறைப்பினும் மறையாவாம்

நெஞ்சத்துக்குறுகிய கரியில்லையாதலின்’

(நெய்தற்கலி 3)

எனவரும் கலித்தொகைத் தொடரிலும் நெஞ்சு என்பது நெஞ்சத்தில் நிலைபெற்றுள்ள முழுமுதற் பொருளைக் குறித்து நிற்றல் ஒப்பு நோக்கற்பாலதாகும்.

செல்வத்தையும் அதற்கு ஏதுவாகிய நன்முயற்சி யையும் நல்கும் தெய்வம் செந்தாமரை மலரில் வீற்றிருந் தருளும் திருமகள். திருமகள் சிவந்த திருமேனியுடைய தெய்வம் என்பதும் அகமலர்ச்சியுடையராய் விருந்தோம்பு வோர் வீட்டில் திருமகள் விரும்பித் தங்குவாள் என்பதும்,

'அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து

நல்விருந்தோம்புவான் இல்' (திருக். 34)

எனவரும் திருக்குறளிற் குறிக்கப்பெற்றன. பிறர் செல்வங் கண்டு பொறாமைப்படுகின்றவனைத் திருமகள் தானும் பொருளாய்த் தனக்கு மூத்தாளாகிய மூதேவிக்கு இடமாகக் காட்டிவிட்டுத்தான் நீங்கிவிடுவாள் என்பார்,

'அவ்வித்தழுக்காறுடையானைச் செய்யவள்

தவ்வையைக் காட்டி விடும்’ (திருக். 167)

என்றார் திருவள்ளுவர். செய்யவள் - திருமகள், தவ்வை - தமக்கை, என்றது மூதேவியை. கரியவளாகிய மூதேவி மெய்ம் முயற்சியில்லாத சோம்பரிடத்தே தங்குவாள். அவள் தங்கையாய்ச் செந்தாமரை மலரில் வீற்றிருக்குந்திருமகள் சோம்பலில்லாதானது முயற்சியின்கண்னே தங்கியிருப்பாள் என்பார்,

'மடியுளாள் மாமுகடி யென்ப மடியிலான்

தாளுளாள் தாமரையி னாள்' (திருக். 617)

என்றார் தெய்வப்புலவர். மடி - சோம்பல், தாள் - முயற்சி.