பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

v

சைவ சமய மெய்ந்நூல்களாம் இப்பதினான்கின் பொருளமைப்பினை வரலாற்று நோக்கில் ஆராய்ந்து 'சைவ சித்தாந்த சாத்திர வரலாறு' என்னும் தலைப்பிலான இவ்வரிய நூலைப் படைத்துள்ளார், திருமுறைத் தமிழ்மணி, சித்தாந்தச் செம்மல், கலைமாமணி, பேராசிரியர் க.வெள்ளைவாரணனார் அவர்கள்.

தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, திருமந்திரம், திருமுறைகள் ஆகிய பண்டைத் தமிழ் நூல்களில் பொதிந்துள்ள நுண்பொருள்களையெல்லாம் ஒப்புநோக்கியாராய்ந்து இந்நூலில் வெளிக்கொணர்ந்திருப்பதைக் கொண்டு இந்நூலாசிரியரின் பேருழைப்பையும் பெருஞ்சிந்தனையையும் நன்குணரலாம்.

சிவவழிபாட்டின் தொன்மையும் உலகளாவிய விரிவும் என்னும் முதற்பகுதியிலேயே பண்டைக்காலத்தில் சமய வேறுபாடில்லாத பொதுமை வாய்ந்த கடவுள் வழிபாடு நம்நாட்டில் இருந்தமையை இந்நூலாசிரியர் எடுத்துக்காட்டியுள்ளமை பாராட்டுக்குரியதாகும்.

தொல்காப்பியனார் காலம் முதலாக உள்ள வழிபாட்டு நெறிகளையும் தத்துவக் கொள்கைகளையும் வரலாற்றுச் சான்றுகளோடு நிரல்படத் தொகுத்துரைக்கும் ஓர் அரிய நூலாக இது அமைந்திருப்பது தமிழுலகத்திற்கும் சமய உலகிற்கும் மேலும் பெருமை சேர்ப்பதாகும்.

சைவ சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கும் பொதுவாக உலகப் பொதுமறையாகிய திருக்குறளின் கருத்துக்களைத் தழுவியுள்ளன என்பதும், சிறப்பாகச் சைவத் திருமுறைகளால் தெளிந்துணரப் பெற்ற தத்துவ உண்மைகளை விரித்துரைக்கும் செந்தமிழ் நூல்களே இப்பதினான்கு நூல்கள் என்பதும் இந்நூலாசிரியரின் முடிந்த முடிபாகும்.

சைவமும் தமிழும் தம்மிரு கண்ணெனப் போற்றிய திரு க.வெள்ளைவாரணனார் அவர்கள் எழுபது ஆண்டுகளுக்கு மேலாக (4-1-1917 - 13-6-1988) இந்நிலவுலகிலே வாழ்ந்திருந்த சைவப் பெருந்தகையாவார். இலக்கண இலக்கியப் பெரும்புலமையாளரான பேராசிரியர் க.வெள்ளைவாரணனார் படைத்த 'பன்னிரு திருமுறை வரலாறு' பயன்மிக்கதொரு நூலாகும். இவ்வகையில் இவருடைய மற்றொரு படைப்பான 'சைவ சித்தாந்த சாத்திர வரலாறு' என்னும் இப்பெருநூலினைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் இப்பொழுது பெருமையுடன் வெளியிடுகின்றது.