பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/837

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

828

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு



உணரார் உணரார் உடங்கியைந்து தம்மிற் புணராமை கேளாம் புறன்”

எனவரும் சிவஞானபோத அவையடக்கச் செய்யுளாகும்.

உயிர்கட்கு இருவினையொப்பு உண்டாகிய நிலையில், ஆணவமலம் தனது ஆற்றல் தேய்தற்குரிய துணைக்காரணங்கள் எல்லாவற்றோடும் கூடுதலாகிய மலபரிபாகமும், மலபரிபாகம் காரணமாக அவ்வுயிரிடத்தே இறைவனது திருவருள் பதிதலாகிய சத்திநிபாதமும் உளவாகும். "ஒன்றில் விருப்பும் ஒன்றில் வெறுப்பும் ஆதல் இன்றிப் புண்ணியபாவம் இரண்டினும் அவற்றின் பயன்களினும் ஒப்ப உவர்ப்பு நிகழ்ந்து, விடுவோனது அறிவின்கண் அவ்விருவினையும் அவ்வாறு ஒப்ப நிகழ்தலே ஈண்டு இருவினையொப்பு என்பதற்குப் பொருள்” என்பர் சிவஞானமுனிவர். திருஞானசம்பந்தப்பிள்ளையார் திருக் கையினால் திருநீறுபூசப்பெற்ற கூன்.பாண்டியன் முன்னை வினை நீங்கி இருவினையொப்பு உடையனாய் இறைவனை உள்ளவாறு அறியுந்தன்மையினைப் பெற்றான் என்பதனை,

‘தென்னவன் மாறன்தானுஞ் சிரபுரத்தலைவர் தீண்டிப் பொன்னவில் கொன்றையார் தந்திருநீறு பூசப்பெற்று முன்னைவல் வினையும் நீங்கி முதல்வனையறியுந்
தன்மை துன்னினான் வினைகள் ஒத்துத்துலையென நிற்றலாலே”

(பெரிய, சம்பந்தர். 819)

எனவருஞ் செய்யுளில் சேக்கிழார் நாயனார் தெளிவாக விளக்கியுள்ளார்.

மலபரிபாகம் வருமளவும் மலத்திற்கு அநுகூலமாய் நின்று நடத்திய இறைவனது திரோதானசத்தி (ம்றைப்பாற்றல்) மலபரிபாகம் எய்தி நிலையில், கருனைமறமாகிய தனது செய்கைமாறிக் கருணையெனப்படும் முன்னைப் பராசத்தி யுருவாய் உயிர்கள் பாற்பதிதலே சத்திநிபாதம் எனப்படும். இறைவனது அருட்சத்தி பக்குவமுடைய உயிர்கள்பாற் பதிதலால் அவ்வுயிர்கள் பாசத்தொடர்பினின்றும் விலகி.