பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


நுகரவேண்டிய இன்பங்களையெல்லாம் எஞ்சாமல் நுகர்ந்து உள்ளத்தமைதியுற்ற நன்மக்கள் என்றும் அழியாத பேரின்பப் பொருளாய்ச் சிறந்து விளங்கும் செம்பொருளை இடைவிடாது சிந்தித்து மீண்டும் பிறவிச் சூழலிற் றிரும்பி வாராமைக்கு ஏதுவாகிய நன்னெறியினைத் தலைப்படுதலே அன்பின் ஐந்தினையொழுகலாற்றின் முடிந்த பயனாகும் என்பது மேற்குறித்த தொல்காப்பியச் சூத்திரத்தின் கருத்தாகும்.

ஒத்த அன்பினராய் மனையறம் நிகழ்த்தி வாழ்ந்தவர்கள் பிறவிப்பிணிப்பினை நீங்கி வீடுபெறுங் கருத்துடையராய் இவ்வுலகிற் பற்றினை விட்டொழித்து எல்லாவுயிர்களிடத்தும் இரக்கமுடையராய்த் துறவற நெறியாகிய அருள் வாழ்வினை மேற்கொள்ளுதல் பண்டைத் தமிழர் வாழ்வியலிற் கண்ட சிறப்பியல்பாகும். இதனை அருளொடுபுனர்ந்த அகற்சி என்ற தொடரால் ஆசிரியர் தொல்காப்பியனார் குறித்துள்ளமை முன்னர்க் கூறப்பட்டது. இத்தகைய அருள் வாழ்வினை விரும்பி நாடாள் வேந்தர்களும் தங்கள் அரச பதவியினைத் துறத்தலுண்டு. இவ்வாறு முடிமன்னர்கள் வீடுபேற்றினை விரும்பித் தமது அரச பதவியினைத் துறக்கும் நிகழ்ச்சியினைக் கட்டில் நீத்த பால்’ என வாகைத்தினையுள் ஒரு துறையாகக் கூறுவர் தொல்காப்பியனார். இமயவரம்பன் தம்பி பல்யானைச் செல்கெழுகுட்டுவன் என்னும் வேந்தர் பெருமான் தன் அரச பதவியினைத் துறந்து காடு போந்த வரலாறு பதிற்றுப்பத்தின் மூன்றாம்பத்தின் பதிகத்துட் குறிக்கப்பெற்றுள்ளமை இங்கு ஒப்புநோக்கற்பாலதாகும்.

நீராடல், நிலத்திடைக்கிடத்தல், தோலுடுத்தல், சடை புனைதல், எரியோம்பல், ஊரடையாமை, கடவுள் வழிபாடு, விருந்தோம்பல் எனத் தவஞ்செய்வார்க்குரிய இயல்புகள் எண்வகையாகச் சொல்லப்பட்டன. தவஞ்செய்வார்க்குரிய எண்வகைச் செயல்முறைகளை நாலிரு வழக்கிற் றாபதப்பக்கம் என்பர் தொல்காப்பியர். ‘நாலிரு வழக்கிற் றாபதப்பக்கம் என்பது யோகியர்க்குரிய இயமம், நியமம்,