பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெடி குண்டுகள் 177

முதலில் பேசியவள், “அடிபோடி மாயமாலக் கள்ளி மலை மலையாக மகனையும் மகளையும் பெற்று ஊரிலே விட்டுவிட்டு இங்கே வந்து யார் கழுத்தை அறுக்கிறாய்! நீ இங்கே கிடந்து மாண்டால், உன் பிணம் சும்மா சுடுகாட்டுக்குப் போய்விடுமா! அதற்குப் பத்து முப்பது அழுதால்தானே உன் பிணம் சுடுகாடு போகும். எங்களுக்கேன் அந்தத் தொல்லை. ஊரில் சத்திரம் சாவடி இல்லையா. அங்கே போய் மாண்டுகிட பறையர் எடுத்துக் கொண்டுபோய் கோவிந்தாக் கொள்ளி போடட்டும்” என்று முன்னிலும் அதிக அதட்டலாகக் கூறித் தாண்டிக் குதித்தாள்.

குருடி, “அடேயப்பா உனக்கு வந்திருக்கிற அதிகாரமே! ஊருக்குப் போயிருக்கும் என் உடன் பிறந்தான் வருவதற்குள்ளேயே, சர்வ அதிகாரத்தையும் செலுத்திப் பார்த்து விடுகிறாயே! அம்மா தாயே! இன்னம் ஒரு நாள் பொறம்மா! அவன் வந்து விடட்டும். அவனிடத்தில் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு நான் உடனே ஊர்ச் சாவடிக்குப் போய் விடுகிறேன். பிறகு நீ ஏகபோகமாய் இருந்து வாழடியம்மா’ என்றாள். அவளது சொற்களைக் கேட்ட மற்றவளுக்கு அடக்க இயலாத பெருத்த கோபம் பொங்கியெழுந்தது. அவள் ஆவேசம் கொண்டவள் போலத் துள்ளிக் குதித்து, ‘அடி கிழக் குரங்கே இத்தனை நாளும் என் கையால் உனக்குக் கொட்டின சோறு கணக்கு வழக்கில்லை. உன் நாறல் புடவையை நான் துவைத்துக் கொடுத்து லக்ஷம் தடவை இருக்கும். துரும்பை எடுத்துத் துரும்போடு போட உனக்குக் கடைப்படவில்லை. கெட்ட கேட்டுக்கு, நீ எனக்குச் சாபமா கொடுக்கிறாய்! எழுந்து போடி வெளியில்’ என்று கூறி, அவ்விடத்தில் இருந்த சாணிச் சட்டியை எடுத்துக் குருடியின் தலையில் கவிழ்த்துத் தனது கையிலிருந்த விளக்கு மாற்றினால் இரண்டு மூன்றடிகள் பட்பட்டென்று கொடுத்து விட்டாள். திடீரென்று தனக்குக் கிடைத்த மரியாதையைக் கண்ட குருடி, ஐயோ ஐயோ! அம்மா அம்மா! அடிக்கிறாளே! கொல்லுகிறாளே! கேள்வி முறை இல்லையா ஐயோ! அப்பா!’ என்று கூக் குரலிட்டு அலறத் தொடங்கினாள்.

அவ்வாறு உள்ளே நடந்த அகோர யுத்தத்தைக் கண்ட திவான் சாமியார் திடுக்கிட்டு நடுங்கிப்போய், “என்ன