பக்கம்:தமிழர் இனிய வாழ்வு.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

"புதுமண மகடூஉ வயினிய கடிநகர்ப்
பல்கோட் டடுப்பிற் பால்உலை இரீஇக்
கூழைக் கூந்தல் குறுந்தொடி மகளிர்
பெருஞ்செய் நெல்லின் வாங்குகதிர் முறித்துப்
பாசவல் இடிக்கும் இருங்காழ் உலக்கை”

என்று நக்கீரனார் நவில்வதனால் நன்கு அறியலாம். மார்கழித் திருவாதிரை நாளில் தொடங்கித் தைப்பூசம் வரையில் நடைபெறும் தைந் நீராட்டு பரிபாடலில் பாரித்துக் கூறப்படுகின்றது. விசயநகர வேந்தர் காலத்துத் தோன்றிய மொழி நிலை உணர்வு வேறுபாட்டால் கார்த்திகை சீரழிந்தது; தீபாவளி புதிது தோன்றிற்று, தைந் நீராடல் தலை தடுமாறிற்று. வேனில் விழா காமன் பண்டிகையாயிற்று. இக் காலத்தில்தான் தெய்வ நிலையங்களில் வழிபாட்டில் வட மொழி இடம் பெற்றது. ஊர்ப் பெயர்களும் தெய்வங்களின் பெயர்களும் வடமொழியில் மாறின, பின்னர் மக்கட் பெயரும் வடமொழிப் பெயர்களாயின.

பழந்தமிழரிடையே சமய வழிபாட்டில் அவரது தமிழ் மொழியே நிலைபெற்றிருந்தது. தெய்வங்கட்குக் கோயில்கள் இருந்தன. அவற்றை நகர் என்றும் தேவ குலம் என்றும் வழங்கினர். மலை முடியும் கடற்கரையும் தெய்வங்களுறையும் கோயில் எடுக்கும் சிறப்புடைய இடங்களாயின. நவிர மலையின் முடியில் முக்கட் செல்வனுக்கு இருந்த கோயிலை மலைபடுகடாம் என்ற சங்க இலக்கியம் குறிக்கின்றது. இக்கோயில்கள் பலவும் மரத்தாலும் மண்ணாலும் பண்டை நாளில் கட்டப்பெற்றன. பல்லவர் காலத்தில்தான் கோயில்களைக் கருங்கற்களால் அமைக்கும் முறை உருக்கொண்டு சிறப்பதாயிற்று, சிவபரம் பொருள் எல்லாத் தெய்வங்கங்கட்கும் மேலாம் நிலையில் எல்லா நிலங்கட்கும்