பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கற்பனை இன்பம்

119


என்று திருவள்ளுவர் அருளிப்போந்தார். இன்னும் பழுதறு பழங்களைத் தாங்கி நிற்கும் இப் பயன்மரம் தன் இனிய பழங்களால் பசிநோய் அகற்றி, குளிர் நிழலால் களைப்பை மாற்றி, பட்டையால் பிணியைப் போக்கி, பல வகையாகப் பயன்படுதல்போல, அறிஞரிடம் அமைந்த செல்வம் வறியார்க்குப் பலவகையிற் பயன்படுதலாலேயே,

"பயன்மரம் உள்ளுர்ப் பழுத்த்ற்றால் செல்வம்
நயனுடை யான்கட் படின்"

"மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கட் படின்"

என்னும் நாயனார் பொருளுரை எழுந்தது. ஆகவே, "தண்மை வாய்ந்த தடாகம் போலவும், பழங்கள் நிறைந்த பயன்மரம் போலவும் வாழ்வதே பண்புடைமையாகும்” என்று இனிதாக எடுத்துரைத்தான். அரசிளங் குமரனும் அதன் உண்மையை அறிந்து தோழன் கூறிய பொருளுரையைப் பொன்போற் போற்றினான்.

அப்பால், இருவரும் தமது ஊரை நோக்கிச் சென்றனர்; செல்லும் வழியில் ஒரு சிற்றறூர் குறுக்கிட்டது. அதன் நடுவே போகும்போது இருவரும் முன் கண்டறியாத ஒரு மரத்தினைக் கண்டு வியந்து நின்றார்கள். அம்மரம் கவையாகிக் கொம்பாகிக் காட்டு மரம்போல் ஒங்கி வளர்ந்திருந்தது. அதன் கொம்புகளிலும் கிளைகளிலும் கூரிய முள் நிறைந்திருந்தது. இலைகளும், தழைகளும் இல்லாமல் பட்ட மரம்போல் நின்ற அதன் கிளைகளில் செவ்வையாய்ப் பழுத்த பழங்கள் கொத்துக் கொத்தாய் அமைந்து கண்களைக் கவர்ந்தன. அம்மரத்தைக் கண்டு இருவரும் வியந்து