பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140

தமிழ் இன்பம்


குறிப்பிட்ட நன்னாளில் மதுரையிலிருந்து கோடையிடிக் கவிராயரும் காஞ்சியிலிருந்து அடுக்குமொழி ஆனந்தக் கூத்தரும் சென்னை வரகவி (வறட்டுக் கவியென்று சொல்லுவார்கள்) வரதராஜ முதலியாரும் வந்திருந்தார்கள். பட்டம் பெற வந்திருந்த கவிராயரைத் தவிர, பன்னிரண்டு பெருமக்கள் ஆயிரக் கால் மண்டபத்தில் சமூகம் அளித்தார்கள். சுபமுகூர்த்தத்தில் மாட்சிமை தங்கிய தீட்சிதப் பெருந்தகை, நீண்ட கரகோஷத்தின் இடையே எழுந்து, பட்டுச் சால்வையைக் கவிராயர் தோளிலே போர்த்து; கட்டிச் சாமந்தி மாலையை அவர் கழுத்திலே அணிந்து, "வித்வ சிரோமணிகளே! சகலபந்த சரபம், சரம கவிச் சிங்கம், தோணிபுரி தழைக்க வந்த தோன்ற்ல் ஶ்ரீ பொன்னப்பக் கவிராஜ மூர்த்திகளுக்கு நடராஜர் சந்நிதியிலே கவிச் சக்கரவர்த்தி என்ற பட்டத்தை நாம் சூட்டுகின்றோம். இன்று முதல் என்றென்றும் இவரைக் கவிச் சக்கரவர்த்தியென்று காசினி வழங்கக் கடவது" என்று ரஞ்சிதமாகப் பேசி முடித்தார். அடுக்கு மொழிக் கூத்தர் அதை ஆமோதித்தார். ஏகமனதாக அகத்தியர் மாணாக்கர் போல் சபையில் வீற்றிருந்த பன்னிருவரும் சிரக் கம்பம் செய்தார்கள். கோடையிடிப் புலவர் வந்தனம் முழக்கினார். சந்தனப்பூச்சுடனும் கொட்டு முழக்குடனும் வித்வ சபை கலைந்தது. கவிச் சக்கரவர்த்திப் பட்டம் பெற்ற சரமகவிராயர் பட்டுச் சால்வையோடு நடராஜரைத் தரிசித்துவிட்டுத் தம் இருப்பிடம் சென்றார்.