பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

198

தமிழ் இன்பம்


நிறைந்தவுடன் மழைக் குறி ஏதேனும் தோன்றுகிறதா என்று விண்ணை நோக்குவர். கார்மேகம் ஒன்றையும் காணாவிட்டால் அவரைச் சுற்றியுள்ள தண்ணிரில் காரமான மிளகாய்ப் பொடியைக் கரைப்பர். இவ்வாறு பாமரமக்கள் எடுக்கும் மூச்சுப்பிடி விழாவில் சில வேளை மழை பெய்வதும் உண்டு. இது பிள்ளையார் படும் பாடு.

தமிழ்நாட்டிலுள்ள சிறந்த திருக்கோவில்களுள் ஒன்று வைத்தீசுரன் கோவில். புள்ளிருக்கு வேளூர் என்பது அதன் பழம் பெயர். அங்குள்ள ஈசன் வைத்தியநாதன். மருத்துவருளெல்லாம் பெரிய மருத்துவன்: வன்பினியையும் தீர்க்க வல்லவன். "பிரிவிலா அடியார்க்கு என்றும் தீரா நோய் தீர்த்தருள வல்லான்" என்று திருநாவுக்கரசர் அப் பெருமானைப் பாடினார். பிறவியென்னும் பெரும்பிணிக்கு ஏதுவாகிய "இருள் சேர் இருவினையும்" துடைக்க வல்ல வைத்தியநாதனை "வினை தீர்த்தான்" என்று பொது மக்கள் போற்றுவாராயினர். 'வினை தீர்த்தான்' என்ற பெயரைக் கேள்வியுற்றார் வசைபாடும் திறம் வாய்ந்த ஒரு கவிஞர். உடனே புறப்பட்டது வசைப் பாட்டு.

"வாதக்கா லாம்தமக்கு மைத்துனற்கு நீரிழிவாம்
போதப் பெருவயிறாம் புத்திரற்கு - மாதரையில்
வந்தவினை தீர்க்க வகையறியான் வேளுரான்
எந்தவினை தீர்த்தான் இவன்!"

என்று கவிஞர் பாடிய பாட்டையும் வஞ்சப் புகழ்ச்சியாக நெஞ்சார ஏற்றுக்கொண்டு வைத்திகரன் கோவிலில் வாழ்கின்றார் செஞ்சடைக் கடவுள்.