பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

250

தமிழ் இன்பம்


திருந்திய முகங்கண்டு திளைத்த நாடு இந் நாடாகும். கொழுகொம்பின்றிக் குழைந்து கிடந்த சிறு முல்லைக் கொடியின் துயர் கண்டு தரியாது, அக்கொடி படருமாறு தன் பொற்றேரை நிறுத்திச்சென்ற புரவலன் வாழ்ந்த நாடு இந் நாடாகும். வழி நடந்து செல்லும் ஏழை மக்கள் வெங்கதிரோன் கொடுமையால் வாடி வருந்தா வண்ணம் இனிய சாலைகளும் சோலைகளும் அமைத்து, அறம் வளர்த்த நாடு இந் நாடாகும். மும்மை சால் உலகுக்கெல்லாம் முதல்வனாய இறைவனுக்குச் செம்மை சான்ற கோயில்களும் கோட்டங்களும் எடுத்த நாடு இந் நாடேயாகும். இங்ஙனம் அன்னசாலைகள் அமைத்தலும், ஆலயங்கள் எடுத்தலும், சாலைகள் வகுத்தலும், சோலைகள் வளர்த்தலும் சிறந்த அறங்களே எனினும், அறிவை வளர்க்கும் கல்லூரிகள் நிறுவுதலே தலைசிறந்த அறமென்று பாரதியார் அறிவுறுத்தினார்.

'எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்' என்னும் உண்மையைப் பழந் தமிழ் மக்கள் பொன்னே போல் போற்றினர். கல்வி நலம் வாய்ந்தவரே மக்களாவரென்றும், அந்நலம் அமையப்பெறாத மானுடர் விலங்கனைய ரென்றும், பழந் தமிழ்ப்பனுவல் பகுத்துரைக்கின்றது. 'கற்றல் கேட்டல் உடையார் பெரியார்’ என்றார் நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தர். எனவே, உடம்பினை வளர்க்கும் அன்ன சாலையினும் உயிரினை வளர்க்கும் அறிவுச்சாலை சிறந்ததென்று அறைதலும் வேண்டுமோ? கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியாய இறைவன் கல்லார் நெஞ்சில் நில்லான் என்னும் உண்மையை உணர்வோமாயின், இறைவனை வணங்குதற்குரிய ஆலயங்களை அமைப்பதற்கு முன்னே அறிவினை வளர்க்கும் கல்லூரிகளை அமைத்தல் வேண்டும்