பக்கம்:திருக்குறள் கட்டுரைகள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சொல்லும் செயலும்

65

எல்லாக் கிராமங்களிலும் திருக்குறள் பிரசாரம் செய்வது என்றும், அவருக்குக் கொடுக்க வேண்டிய சம்பளத்தைப் பனைமரத்துப் பட்டி பரமசிவம்பிள்ளையே கொடுப்பது என்றும் முடிவு செய்யப் பட்டது-அடுத்த நாளே யாவும் திட்டப்படி நடை பெறத் தொடங்கிவிட்டன.

பட்டினத்திலிருந்து வந்த பழனியப்ப முதலியாருக்கு ‘திருக்குறள் பிரசங்கியார்’ என்ற மறு பெயரும் உண்டு எல்லாப் புலவர்களையும்போல அவரும் வறுமை வாய்ப்பட்டு வாடி வருந்தி வந்தவர். இருந்தாலும் பரமசிவம் பிள்ளையின் ஆக்கமும் ஊக்கமும், அவருக்கு ஆறுதலும் தேறுதலும் அளித்தன அவர் பல்வேறு கிராமங்களுக்கும் சென்று, தனது வேலைகளை மிகத் திறமையாகச் செய்து வந்தார்.

ஈச்சம்பட்டியைவிட்டு இன்னாசிமுத்து உபதேசியார் ஏழெட்டு ஊர்களுக்குச் சென்று வந்தால், பனைமரத்துப் பட்டியைவிட்டு பழனியப்ப முதலியார் பத்துப்பதி னைந்து ஊர்களுக்குப் போய் வருவார் உபதேசியார் பைபிளைப் பற்றியும் பிரசங்கியார் திருக்குறளைப் பற்றியும் தகுந்த மேற்கோள்களுடன் அழுத்தந் திருத்தமாய்ப் பேசி, கிராம மக்கள் மனதில் நன்கு பதியவைத்து வந்தனர்.

காலப் போக்கில் பிரசாரம் போட்டிப் பிரசாரமாக மாறிவிட்டதால், ஒருவர் பேச்சை மற்றொருவர் கண்டித்துப் பேசுவது இயல்பாகவே நடைபெறத் தொடங்கிவிட்டது. இதற்காகப் பிரசங்கியார் பைபிளையும், உபதேசியார் திருக்குறளையும் ஆழ்ந்து படித்து ஆராயத் தொடங்கினர். அந்த ஆராய்ச்சி அவர்களின் பேச்சுக்குப் பெருந்துணையாக இருந்து வந்தது.

“இரு பேச்சர்ளிகளும் எந்த ஊரிலும் நேருக்கு நேராகச் சந்திக்கவில்லை. வாது புரியவுமில்லை. ஒருவரை ஒருவர் அறியார்” என்பது தான் ஊராரின் நம்பிக்கை. உண்மையில் உபதேசியாரின் பேச்சுமுறை

திரு-5