பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

நூல் வந்த வரன்முறை


திருவுந்தியார் என்னும் முதல் நூற்பொருள் குருவின் அருளால் தமக்குக் கிடைத்த வரலாற்றினைக் கூறும் முறையில் அமைந்தன திருக்களிற்றுப்படியாரிலுள்ள முதல் மூன்று பாடல்களாகும். ஆகவே அவற்றை நூல்வந்த வரன்முறை என்ற அமைப்பில் முன்வைத்து இங்கு உரை வரையப் பெறுகின்றது.


திருக்களிற்றுப்படியார்


கடவுள் வாழ்த்து


1. அம்மையப்ப ரேயுலகுக் கம்மையப்ப ரென்றறிக

அம்மையப்ப ரப்பரிசே வந்தளிப்பர் - அம்மையப்பர்

எல்லா வுலகுக்கும் அப்புறத்தார் இப்புறத்தும்

அல்லார்போல் நிற்பர் அவர்.


திருக்களிற்றுப்படியார் என்னும் இந்நூலின் தொடக்கத்திலே மங்கல வாழ்த்தாக அமைந்த இம்முதற்பாடல் வாழ்த்து, வணக்கம், பொருளியல்புரைத்தல் என்னும் மூவகையுள் பொருளியல்புரைத்தலாகும்.


இதன் பொருள்:- தன்னிற்பிரிவிலா உமையம்மையைத் தன்னுள் அடக்கிய சிவபெருமானே உலகவுயிர்கள் எல்லாவற்றிற்கும் தாயுந் தந்தையும் என்று அறிவாயாக. அம்மையும் அப்பனுமாகிய அவ்விறைவரே தம் அருளாகிய சத்தியுடன் எழுந்தருளிவந்து மன்னுயிர்களின் மலப்பிணிப்பினையகற்றிப் பேரின்பமாகிய வீடுபேற்றினை அளித்தருளுவர். மாதொருபாகராகிய அம்முதல்வர் உலகுயிர்களுடன் பிரிவின்றிக் கலந்துள்ளாராயினும் அவற்றின் தன்மைகள் சிறிதும் தம்மைப் பற்றாதவாறு எல்லாவுலகுக்கும் அப்பாற்பட்டுள்ளார். அங்ஙனம் அண்டங்கடந்து அப்புறத்தாராயினும் இவ்வுலகங்களை இயக்குதற் பொருட்டு இவ்வுலகுயிர்களின் அகத்தும் கலவாதார் போன்று நீக்கமறக் கலந்து நிலைபெற்றுள்ளார். எ-று.


‘ஒருவன் என்னும் ஒருவன் காண்க’ (திருவாசகம்) என்றவாறு ஒப்பற்ற பேரறிவுப் பொருளாகிய முழுமுதற்பொருள் ஒன்றே என்பது ‘ஒருவனே தேவனும்’ எனவரும் திருமூலர் வாய்மொழியால் நன்கு தெளியப்படும். காண்டற்கரிய கடவுளாகிய அவ்வொரு பொருளே தான் உலகுயிர்களில் தோய்வின்றித் தானே திகழொளியாய் நிற்குந் தனிநிலையிலே 'சிவம்’ எனவும், அதுவே உலகெலாமாகி வேறாய் உடனுமாய் இவ்வாறு உயிர்களின் பொருட்டு அருளாய் விரிந்து இரண்டறக் கலந்து நின்று மன்னுயிர்களை உய்வித்தருளும் நிலையிலே 'சத்தி' எனவும் இரு நிலையில் வைத்துப்