பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்

159


சிவயோகி என்பால் எழுந்தருளிவந்து இப்பொழுது என்னுடைய அறியாமை காரணமாகப் பிறப்பிறப்புக்களிலே பட்டுச் சுழன்று வருகின்ற வேகத்தையொழித்து அசைவற்ற நிலையாகிய தன் திருவடியிலே வைத்தருளினான் எ-று.

இதன் முதற்கண் அமைந்த ஆளுடையான் என்றது, எல்லா வுயிர்களையும் அடிமையாகவுடைய இறைவனை. “எந்தரமும் ஆளு டையானே” என்றது, அவ்விறைவன் என்னளவிலும் ஆளுடைய தேவன் என்னுந் திருப்பெயருடைய குருவாகவே திருமேனிகொண்டு எழுந்தருளி என்னை ஆளாகக் கொண்டருளினான் என்பதாம். திருக்களிற்றுப்படியார் என்னும் இம்மெய்ந்நூலை இயற்றியருளிய திருக்கடவூர் உய்யவந்த தேவனார்க்குக் குருவாக எழுந்தருளி மெய்யுணர்வு நல்கியவர், திருவியலூர் ஆளும் சிவயோகியார் ஆகிய ஆளுடைய தேவநாயனாரேயென்பது இதனால் நன்கு தெளியப்படும். “அறியுந்தாளுடையான்” என்றது, உலகவுயிர்கள் உய்தற்பொருட்டுப் படைத்தல் முதலிய ஐந்தொழில்களையும் எல்லாவற்றையும் இருந்தாங்கே உயிர்கள் பொருட்டு அறிந்து அறிவிக்கும் திருவருளாகிய திருவடியினை யுடையான் என்பதாகும். தாளுடையான் தொண்டர் தலைக் காவல் என்றது, தன்னைவழிபாடு செய்யும் தொண்டர்களின் அறியாமையினைப் போக்கி அவர்களை உலகவாதனையாகிய மாயப்படை வந்து தாக்காமல் தன் திருவடியினாற் பாதுகாக்கவல்ல தலைமைக் காவலனாகவுள்ளான் என்பதாம். இத்தொடர் “உறுநர்த் தாங்கிய மதனுடை நோன்றாள்” என்னுந் திருமுருகாற்றுப்படை யடியினை யடியொற்றி யமைந்ததாகும். திருக்களிற்றுப்படியாரை அருளிச்செய்த, திருக்கடவூர் உய்ய வந்த தேவநாயனராகிய இவ்வாசிரியர் திருவியலூராளும் சிவயோகியாராகிய ஆளுடைய தேவநாயனர் குருவாக எழுந்தருளித் தமக்கு மெய்யுணர்வருளித் திருவுந்தியாரை யுபதேசித்து உய்யக்கொண்டருளிய திறத்தை,

'திருவியலு ராளுஞ் சிவயோகி இன்றென்
வருவிசையை மாற்றினான் வந்து’

என உளமுவந்து போற்றினார். வருவிசை என்றது, காரண காரியத் தொடர்ச்சியுடையதாய்க் கடலலைகள் போன்று தொடர்ந்து வருகின்ற பிறப்பிறப்புக்களாகிய சுழலில் அகப்பட்டு விரைதற்கு ஏதுவாகிய ஆன்ம போதத்தை, வந்து மாற்றினான் - தானே எளிவந்து நீக்கியருளினான். மாற்றுதல்-ஒழித்தல், “வேகங்கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க” (சிவபுராணம்) எனவரும் திருவாசகத் தொடர் இங்கு ஒப்புநோக்கத் தகுவதாகும்.