பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்



சொரூபமுங் கரைந்து விக்கிரகங்களும் ஒரு நீர்மையாய் உனக்கு நாதரூபமாய் நாதாந்தத்திலே அருளைப் பெறுவையென்று ஆசாரியன் அருளிச் செய்ய அறிந்து, இந்த ஓங்காரமான ஐந்தெழுத்தும் உச்சாரண பேதத்திலே நாற்பத்தொன்பதா மெழுத்தும் பதினாலா மெழுத்தும் ஆறாமெழுத்தும் இவை கூடின விடத்திலே விந்துவும் நாதமுமாக இந்த முறைமையிலே ஐந்தெழுத்தாமென்றும் வேதாகமங்களிலே விதிக்கையால், இந்த ஐந்தெழுத்தையும் உன் தத்துவமான உச்சரிப்புக்கு வந்து நாதம் முடிந்தவிடத்திலே கிஞ்சிஞ்சமான (மெல்லியதாய்த் தோன்றும்) ஆன்மபோதமுங் கெடில் அப்பொழுதே சத்திக்குக் கர்த்தாவாகிய சிவன் குற்றமறத் தோன்றி உண்மையான சொரூபத்திலே கூடி இரகஷிப்பன். (மாணாக்கனே) கேட்பாயாக என்க” என்பது தில்லைச் சிற்றம்பலவர் எழுதிய உரைவிளக்கமாகும்.

‘உய்யஎன் லுள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற
மெய்யா’

(திருவாசகம்.சிவபுராணம்)

எனத் திருவாதவூரடிகள் அருளிய தொடருக்கு அமைந்த விளக்கமாக இவ்வுரையமைந்துள்ளமை உணர்ந்து இன்புறத்தகுவதாகும்.


கக. தாக்கியே தாக்காது நின்றதோர் தற்பரம்
நோக்கிற் குழையுமென் றுந்தீபற
நோக்காமல் நோக்கவென் றுந்தீபற.


இது, நிராதார யோகத்தின் இயல்புணர்த்துகின்றது.

(இ-ள்) உலகுயிர்கள் யாவும் தானேயாய் நீக்கமறக் கூடியிருக்கும் நிலையிலும் அவற்றின் தன்மை தன்னைப் பொருந்தாதபடி அவற்றில் தோய்வற நின்ற ஒப்பற்ற மேலான முழுமுதற் பொருள், நீ நினதறிவினுற் பொருந்தி நோக்குவாயானால் உனக்குத் தன்னுண்மை புலனாகாதவாறு உருவற மறைந்து விடும், ஆகவே அதனை நாம் நம் மறிவினால் நோக்குகின்றோம் என்னுந் தன்முனைப்பினை விடுத்து அதன் அருளின் துணை கொண்டு நோக்குவாயாக. எ-று ,

தாக்குதல் - எல்லாப் பொருள்களிலுந் தோய்ந்து ஒன்றாய்ப் பிரிவற நிற்றல். தாக்காது நிற்றல் - அவற்றின் தன்மை தனக்கு எய்தலின்றித் தன்னியல்பு குன்றாமல் தனித்து நிற்றல். தற்பரம்- தனக்குத் தானே பரம்; என்றது, தனக்குவமையில்லாத இறைவன் என்றவாறு, நோக்குதல் - யான் ஆராய்கின்றேன் என்னும் உயிர்முனைப்புடன் ஆராய்ந்துகாணப் புகுதல். நோக்காமல் நோக்கல்-நோக்குதற்கருத்தா தானே என்னும் எண்ணத்தைவிட்டு அவனருளே கண்ணாகக்கொண்டு பார்த்தல். குழைதல் - மோப்பக் குழையும் அனிச்சம் என்புழிப்போல