பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்

63


34. சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின் என்றமையாற்
சார்புணர்தல் தானே தியானமுமாம் - சார்பு
கெடவொழுகின் நல்ல சமாதியுமாம் கேதப்
படவருவ தில்லைவினைப் பற்று.

(இ-ள்) தெய்வப்புலமைத் திருவள்ளுவ தேவநாயனார், ‘சார்புணர்ந்து சார்புகெட வொழுகின்’ என அருளிச் செய்தமையால் தோற்றமில் காலமாக ஆன்மாவுக்குப் பற்றுக் கோடாகவுள்ள திருவடி ஞானத்தைத் திருவருளே கண்ணாக அறிந்து அதனுடன் ஒத்து நின்றுணர்தலே சித்தமதொருக்கிச் சிவனை நினைந்துபோற்றும் தியான முறையாகும். அந்நிலையில் ‘தியானிப்பவன் நானே’ என எண்ணும் தற்சார்பாகிய சுட்டுணர்வு கெடச் சிவபரம்பொருளோடு ஒன்றி அசைவற்று நிற்பின் அப்பொழுதே இன்புருவாகிய சிவனைக் கூடிமகிழும் சமாதிநிலை உளதாகும். பின்பு ஊழ்வயத்தாற் சாரக்கடவனவாய் நின்ற வல்வினைத் துன்பங்கள் (அவர்களுடைய உணர்வொழுக்கங்களையழித்துச் சாரும் வலியற்றனவாதலால்) அன்னோரைச் சார்ந்து வருத்துதல் இல்லை எ-று.

இப்பாடலின் முதலடியில் முதற்கண் உள்ள ‘சார்பு’ என்னுஞ் சொல், எவ்வுயிர்க்குஞ் சார்பாயுள்ள திருவருளையும், அடுத்துநின்ற சார்பு என்னுஞ்சொல், ஆன்மபோதத்தின் விளைவாகிய யான் எனது என்னும் உயிர்ச் சார்பு பொருட்சார்புகளையும் குறித்தன. ‘சார்புணர்தல்' என்பது தியானத்தையும், ‘சார்புகெடவொழுகல்’ என்பது சமாதியினையுங் குறித்து நின்றன. கேதப்பட வினைப்பற்று வருவது இல்லை என இயைத்துப் பொருள்கொள்க. கேதம்-துன்பம்.

எல்லாப்பொருட்குஞ் சார்பாயுள்ள இறைவனது திருவருளை யுணர்ந்து, தம்மைச் சார்ந்துள்ள யான் எனது என்னும் இருவகைப் பற்றுக்களும் தம்மைவிட்டு நீங்குமாறு திருவருள் வழி ஒத்துச் சிவ பரம்பொருளைச் சிவயோகநிலையிற் கூடியொழுகவல்லவராயின், அவர்களை ஊழ்வயத்தாற் சாரக்கடவனவாய் நின்ற வல்வினைத் துன்பங்கள் அவர்தம் உணர்வொழுக்கங்களையழித்து அடரும் வலியற்றனவாய்க் கெட்டொழியும் என்பதாம்.

இறைவனது திருவருட் சார்பே மன்னுயிர்கட்குச் சார்பாய் (ஆதாரமாய்) விளங்குவது என்னும் இவ்வுண்மையினை,

‘சைவனாரவர் சார்பலால் யாதுஞ்சார்பிலோம் நாங்களே’ என ஆளுடையபிள்ளையாரும்,