பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

107

“திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவற்கு யாண்டு நாற்பத்தாறாவது ராஜாதிராஜ வளநாட்டுத் தனியூர் பெரும்பற்றப்புலியூர் உடையார் திருச்சிற்றம்பல முடையார்க்குத் திருநந்தவனப்புறமாகவும் ஸ்ரீமாகேஸ்வரர்க்குத் திருவமுது செய்ய மடப்புறம் நம் பெருமாள் திருத்தங்கையார் மதுராந்தகியாழ்வார் வாச்சியன் இரவிதிருச்சிற்றம்பல முடையான் பேரில் விலை கொண்ட நிலம் கிடாரங்கொண்ட சோழப் பேரிளமை நாட்டு எருக்கட்டாஞ் சேரியான ஜயங்கொண்ட சோழ நல்லூர்ப் பால்" (தெ. இ. க. தொகுதி 4 எண் 222) எனவரும் கல்வெட்டுப் பகுதியில் குறிக்கப் பெற்றுள்ளமை காணலாம்.

இங்கு எடுத்துக் காட்டிய கல்வெட்டுப் பகுதிகளால் முதற் குலோத்துங்க சோழன் தங்கைமாராகிய இராசராசன் குந்தவையாரும், மதுராந்தகி யாழ்வாரும் தில்லைப் பெருங்கோயிலுக்குத் திருப்பணிகள் பலபுரிந்துள்ளமை நன்கு புவனாதல் காணலாம்.

முதற்குலோத்துங்க சோழனது நாற்பத்தாறாம் ஆட்சியாண்டில் தொண்டை 'நாட்டுக் காரிகைக் குளத்தூர் தலைவனும், மிழலை நாட்டு வேளாண்மை கொண்டவனுமாகிய கண்டன் மாதவன் என்பான் தில்லையம்பலத்தின் வடகீழ்த் திசையில் சொன்னவாற்றிவார் கோயிலும் சிவபுராணங்களை விரித்துக் கூறுதற்கு இடமாகிய புராண மண்டபமும் அதனை யொட்டிய திருமாளிகைப் பத்தியும் மலைபோன்று உயர்த்து தோன்ற வரிசையாகக் கட்டினான். இச்செய்தி நீடூர்க் கோயிலில் வரையப் பெற்றுள்ள கல்வெட்டில்,

"ஆரியவுலகம் அனைத்தையும் குடைக்கீழ்
ஆக்கிய குலோத்துங்க சோழற்
காண்டொரு நாற்பத்தாரிடைத் தில்லை.
பம்பலத்தே வட கீழ்பால்
போரியல் மதத்துச் சொன்னவாற்றிவார்
கோயிலும் புராண நூல் விரிக்கும்
புரிசை மாளிகையும் வரிசையா விளங்கப்
பொருப்பினான் விருப்புறச் செய்தான் ... கண்டன் --- மாதவனே"