பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

123

"சபாபதியின் முன்னுள்ள, முகமண்டபத்தையும் மலைமகள் (சிவகாமியம்மை) கோயிலின் கோபுரத்தையும் சுற்றியுள்ள பிரகாரமாளிகைகளையும் அவ்வூர்ப் பெருமானிடத்தே இடையறாத பக்தி கொண்ட இவ்வரசன் பொன்மயமாக விளங்கும் படி நிர்மாணித்தான்." எனத் திரிபுவன வீரேச்சுரத் திருக்கோயிலில் வரையப்பட்டுள்ள வடமொழிக்கல்வெட்டும், இவ்வேந்தன் தில்லையிற் செய்த திருப்பணிகளைக் கூறியுள்ம்மமை காணலாம். இக்கல்வெட்டில் முகமண்டபம் என்றது, தில்லைச்சிற்றம்பலவர் திருமுன் கொடி மரத்தின் தென் திசையில் அமைந்துள்ள நிருத்தசபையெனக் கொள்ளுதல் ஏற்புடையதாகும். இச் சபையானது குதிரைகள் பூட்டிய தேரின் அமைப்பினையுடைய தாயிருத்தலின் இது தேர் மண்டபம் எனவும் வழங்கப் பெறும். (சங்கற்ப நிராகரணம்), இம்மண்டபத்தின் தூண்கள் யாவும் இவ்வேந்தனால் தஞ்சை மாவட்டம் திரிபுவனத்தில் நிறுவப் பெற்ற திரிபுவன வீரேச்சுரத்திலுள்ள தூண்களின் அமைப்பினையுடையனவாக இருத்தலாலும் இவனது வழிபடு மூர்த்த மாகத் திரிபுவனத்திலுள்ள சரபமூர்த்தியின் திருமேனி இச்சபையிலும் இருத்தலாலும் இம்மண்டபத்தின் வடபுறத்து அடிப் பட்டியலில் கூத்தப்பெருமானை நோக்கிக் கும்பிடும் நிலையில் இவனது உருவப் படிவம் நேரே அமைக்கப் பெற்றிருத்தலாலும் நன்கு விளங்கும். சிறிய அளவில் இச்சபையில் உள்ள இவ்வேந்தனது கருங்கற் படிவமும் திரிபுவன வீரேச்சுர விமானத்தில் உள்ள இவனது சுதைப்படிவமும் ஒன்றாயிருத்தலால் இந் நிருத்தசபையைக் கட்டியவன் திரிபு வீரேச்சுரத் திருக்கோயிலை நிறுவிய மூன்றாங் குலோத்துங்க சோழனே என்பது நன்கு தெளியப்படும்.

தில்லையில் திருமாளிகைப் பத்தியுடன் கூடிய மூன்றாம் பிராகாரம் இராஜாக்கள் தம்பிரான் என்னும் சிறப்புப் பெயரினையுடைய மூன்றாங் குலோத்துங்கனால் அமைக்கப் பெற்றதாகும். அதுபற்றியே இது இராசாக்கள் தம்பிரான் திருமாளிகையென கல்வெட்டில் வழங்கப் பெறுகின்றது. சேரபாண்டிய மண்டலமாகிய பாண்டி நாட்டை இவ்வேந்தன் கைப்பற்றிய நிலையில் அந்நாட்டில் திறையாகப் பெற்ற பசும்பொன்னும் விளை