பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124

நிலங்களும் ஆகியவற்றைப் பெரும்பற்றப்புலியூர் தில்லையம்பலத்திலே ஆடல் புரியும் கூத்தப் பெருமானுடன் இருந்து அம் முதல்வனது அருள் நடனங்கண்டருளும் சிலகாமியம்மைக்கும் திருவாரூர்ப்பெருமானுக்கும் திரிபுவன வீரேச்சுரத்து இறைவனுக்கும் மதுரைத்திருவாலவாய் இறைவனுக்கும் கொடுத்து மகிழ்ந்தான். இச்செய்தி,

'சிறை கொண்ட புனல் வையைச் சேர பாண்டிய மண்டலத்து
இறை கொண்ட பகம் பொன்னும் இறையிலியு மெயிற்புலியூர்
ஆடும் அம்பலவாணர் கூடி வாய்ந்த திருநடங் கண்டருளும்
பாடகக்காற் பைங்கிளிக்கும் பைம்பொன் மதிள் திருவாரூர்
வானவற்கும் திரிபுவன வீரீச்சுர அருந்தவற்கும்
தேன்விரிசடைத் திருவாலவாய்ச் செழுஞ்சுடர்க்குங்

கொடுத்தருளி'

எனவரும் இவ்வேந்தனது யெய்ச்சீர்த்தியால் அறியப்படும்.

இவ்வேந்தனது முப்பத்தாறாவது ஆட்சியாண்டில் தில்லைச் சிற்றம்பலத்தில் திரு அணுக்கன் திருவாயிலை ஒட்டி, அமைந்த கனக சபையாகிய எதிரம்பலத்தின் அடிப்பீடமாகிய குறடு இவ்வேந்தனால் பொற்றகடு போர்த்தப் பெற்றது. பொற்றகடு போர்த்துவதற்குமுன் அக்குறட்டில் வரையப் பெற்றிருந்த கல்வெட்டு படியெடுக்கப் பெற்று இரண்டாம் பிரகாரத்தினையொட்டிய வாயிலாகிய குலோத்துங்க சோழன் திருமாளிகைப் புறவாயில் வடபக்கத்திற் பொறிக்கப்பட்டது. முதற் குலோத்துங்க சோழனது நாற்பத்தாறாவது ஆண்டில் அவ்வேந்தனுடைய தங்கையார் மதுராந்தகி ஆழ்வார் திருச்சிற்றம்பல முடையார்க்குத் திருநந்தவனமாகவும்; ஸ்ரீ மாகேஸ்வரர்க்குத் திருவமுது செய்ய மடப்புறமாகவும் நிலமளித்த செய்தியினைக் கூறுவது இக்கல்வெட்டாகும்.

தில்லைப் பெருக்கோயிலின் மூன்றாம் பிராகாரத்தை இராசாக்கள் தம்பிரான் திருமாளிகை எனத் தன் பெயரால் அமைத்த மூன்றாங் குலோத்துங்க சோழன் அத்திருச்சுற்றின் மேலைப் பிராகாரத்தில் தன் முன்னோர் நிறுவிய சிலகாமியம்மை திருக் கோயிலுக்குத் திருப்பணி செய்ததோடு அதனையடுத்துள்ள