பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130

ஏற்பாடு செய்ததுடன் தில்லை நாயக நல்லூருக்குத் 'திருவம்பலப் பெருமாள் புரம்' என்ற புதிய பெயரையும் சூட்டினான். (S.II. Vol. XII. No. 154). அடுத்த ஆண்டில் இவன் தில்லைக் கோயிலுக்குரிய மூன்று திருநந்தவனங்களின் பராமரிப்பிற்காகச் சில நிலங்களை அளித்தான். (ibid No. 154). இவன் காலத்தில்தான் தில்லைக் காளி கோயில் சுற்றளியாக எடுக்கப்பட்டது. இவனது 8-ஆம் ஆண்டுக் கல்வெட்டு அக்கோயில் திருப்பணி நடைபெற்று வந்ததைத் தெளிவாகக் குறிப்பிடுகின்றது. (SI.1 Vol. VIII. No. 717). இவனது பத்தாவது ஆட்சியாண்டில் அத்திருப்பணி முடிவுற்றிருத்தல் வேண்டும். (S. I. I, Vol, XII No. 159). இதற்கு முன்னர்த் தில்லைக்காளி 'தில்லைவனமுடைய பரமேஸ்வரி' எனவும், பின்னர் பிடாரியார் 'திருச்சிற்றம்பல மாகாளி' எனவும் அழைக்கப் பட்டதைக் கல்வெட்டுக்களிலிருந்து அறிகின்றோம். இக்காளி கோயில் தற்பொழுது பள்ளிப் படை என்றழைக்கப்படும் விக்கிரம சோழ நல்லூரின் எல்லைக் குட்பட்டிருக்கின்றது. தில்லைக் கோயிலின் கிழக்குக்கோபுரம் இவனால் கட்டப்பட்டதை இவனுடைய திரிபுராந்தகக் கல்வெட்டிலிருந்து அறிகிறோம். (S. I. I. Vol. XII No. 247). நான்கு திக்கிலும் மிருந்த வேந்தர்களை வென்று, அவர் செல்வத்தைக் கவர்ந்து, துலாபாரம் நடத்தி, அப்பொன்னால் மேருமலையைப் போன்ற கிழக்குக் கோபுரத்தைத் தன் பெயரால் இக்காடவன் எடுப்பித்தான். இக்கோபுரத்தின் நான்கு பக்கங்களையும் இவன் ஒளிமயமாக நிர்மாணித்துக் கும்பாபிஷேகத்தைச் செய்தான், இத்திருப்பணி கி.பி. 1262-ஆம் ஆண்டிற்குள் நடைபெற்றிருத்தல் வேண்டும். மேற் கூறிய திரிபுராந்தகக் கல்வெட்டில் தெற்குக் கோபுரத்தைப்பற்றிய குறிப்பு எதுவும் இல்லாதது கவனிக்கத் தக்கது. ஒரே பெயரில் விளங்கிய தந்தையும் மகனும் முறையே தெற்குக் கோபுரத்தையும் கிழக்குக் கோபுரத்தையும் கட்டினார்கள் என்ற உண்மையை மறுப்பதற்கில்லை. இருவரும் தில்லைக் கோயிலுக்கும், திருக்களாஞ் செடியுடையார் கோயிலுக்கும் தனிப்பட்டோர் பலர் அளித்த நிலங்களுக்கு வரிவிலக்குச் செய்துள்ளார்கள்.

முதலாவது கோப்பெருஞ் சிங்கனும் அவன் மகனும் நாட்டியக் கலையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள். இரு-