பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160

வைத்த நடராசமூர்த்தியை எடுத்து வந்து மீண்டும் தில்லைப் பொன்னம்பவத்தில் வழிபாடு செய்ய எண்ணித் தாம் நடராச மூர்த்தியைப் பாதுகாப்பாக வைத்த சிற்றூரையடைந்தனர். ஆண்டுகள் பல சென்றமையாலும் நள்ளிரவில் வைத்தமையாலும் அம்மூர்த்தியைப் புதைத்து வைத்த இடம் இன்னதென அறிந்து கொள்ள இயலாமல் மனக்கலக்கமுடையவராய் நின்றனர். புளியந் தோப்பினருகே மாடு மேய்த்துக்கொண்டிருந்த முதியவரொருவர் உச்சிவேளையில் தன்னுடனிருந்த சிறுவனை நோக்கி 'தம்பீ, அந்த அம்பலப்புளியிலே கொண்டு மாடுகளை விடு. நான் வந்து விடுவேன்' எனக் கூறினார். அதனைக் கேட்ட தில்லை வாழந்தணர்கள் அம்மரத்திற்கு 'அம்பலப்புளி' என்ற பெயர்வரக் காரணம் என்ன என வினவினர். எனக்குத் தெரியாது; எங்கள் எசமான் இம்மரத்திற்கு அடிக்கடி பூசை போடுவார்" என்றார் கிழவர். அதனைக் கேள்வியுற்ற அந்தணர்கள் மரத்துக்குச் சொந்தக்காரர் யார்? எனக் கேட்டுத் தெரிந்து அவரையடைந்து அதுபற்றிக் கேட்டனர். அவரும் தமக்குரிய புளியமரப் பொந்தில் நடராசப் பெருமானை மறைத்து வைக்கப் பெற்றிருத்தலை ஒருவரும் அறியாதபடி பாதுகாத்து வருவதனை எடுத்துரைத்தார். தில்லைவாழந்தணரும் அவரது இசைவுபெற்று நடராச மூர்த்தியைப் பொன்னம்பலத்தில் எழுந்தருளச் செய்து முன்போல் பூசனை செய்வாராயினர். நடராசர் மறைக்கப் பெற்றிருந்த அம்பலப்புளியைத் தன்னகத்தே கொண்டுள்ள சிற்றூர் அன்று முதல் புளியங்குடியென வழங்கப் பெற்றது. நடராசர் திருவுருவினைப் பாதுகாத்துவந்த சிவவேளாளர் குடும்பத்தார் புளியங்குடியார் என அழைக்கப் பெற்றனர். செவி வழியாக வழங்கப் பெற்றுவரும் இச்செய்தி,

"தெளிவந் தயன்மா லறியாத தில்லைப் பதியம் பலவாணர்
புளியம் பொந்தினிடம் வாழும் புதுமை காட்டிப் பொருள் காட்டி
எளிதிற் புளியங் குடியாரென் றிசைக்கும் பெருமை ஏருழவர்
வளருங் குடியிற் பொலிவாழ்வு வளஞ்சேர் சோழ மண்டலமே" (99)

எனச் சோழ மண்டலச் சதகச் செய்யுளில் இடம் பெற்றுள்ளமை காணலாம். இப்பாடலை யூன்றி நோக்குங்கால் நடராசர் திருவுருவம் மறைத்து வைக்கப்பெற்ற புளியங்குடி என்னும் ஊர்