பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

பொருட்டு அவர்தம் எலும்பினை இடுதல் நெடுநாளைய மரபாக நிலை பெற்று வருகிறது. இங்கு இடப்படும் எலும்பு கரைந்து போதல் பலரும் அறிந்த செய்தி.

4. வியாக்கிரபாதத் தீர்த்தம்:- இது தில்லைப் பெருங் கோயிலின் மேற்றிசையில் வியாக்கிரபாத முனிவர் தம் ஆன்மார்த்தமாகக் கொண்டு வழிபாடு செய்த திருப்புலீச்சுரர் திருக்கோயிலுக்கு எதிரே அமைந்த தீர்த்தமாகும். திருத்தொண்டத்தொகை அடியார்களுள் ஒருவராகிய திருநீலகண்டக் குயவநாயனார் இன்பத்துறையில் எளியராய் ‘எம்மைத் தீண்டுவீராகில் திருநீலகண்டம்' என மனைவியார் கூறிய ஆணைமொழியினை மதித்து மற்றை மாதரார் தம்மையும் மனத்தினும் தீண்டாது ஐம்புலன்களை வென்று விளங்கினார். திருநீலகண்டக்குயவரும் அவர் மனைவியாரும், முதுமை அடைந்த நிலையில் சிவபெருமான் சிவயோகியாராக வந்து ஓர் ஓட்டினைத் தந்து அதனை மறையச் செய்து மீண்டும் வந்து கேட்க அதனைத் தர இயலாத நிலையில் திருநீலக்கண்டக்குயவனார் முதுமைப் பருவமுற்ற தாமும் தம்மனைவியும் ஆக இத்திருக்குளத்தில் மூழ்கி இளமை பெற்று எழுந்தனர் என்பது வரலாறு. முதுமைப் பருவத்தினராகிய திருநீலகண்ட நாயனாரும் அவர்தம் மனைவியாரும் இத்தீர்த்தத்தில் மூழ்கி இளமைபெற்று எழுந்தமையால், இத்தீர்த்தம் இளமை ஆக்கினார் குளம் என்றும், இக்குளத்தின் மேற் கரையிலுள்ள திருப்புலீச்சுரர் திருக்கோயில் இளமை ஆக்கினார் கோயில் என்றும் வழங்கப் பெறுவன ஆயின.

5. அனந்த தீர்த்தம்;- இது தில்லைப் பெருங் கோயிலுக்கு மேற்றிசையில் பதஞ்சலி முனிவர் ஆன்மார்த்தமாக வழிபாடு செய்த அனந்தீச்சுரத் திருக்கோயிலுக்கு முன்னே அமைந்துள்ள தீர்த்தமாகும்.

6. நாகசேரி தீர்த்தம்:- பதஞ்சலி முனிவர் நாகலோகத்தினின்றும் பிலத்துவார வழியாகத் தில்லைக்கு ஏறிவந்த இடத்திலுள்ள தீர்த்தமாதலின் இது நாகசேரி தீர்த்தம் எனப் பெயர் பெற்றது. இத்தீர்த்தம் அனந்தீச்சுரர் திருக்கோயிலுக்கு வட மேற்கே அமைந்துள்ளது.