பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

றுள்ளது. இதன் நடுவே இறைவன் ஐந்தொழில் ஆடல் புரியும் சிற்றம்பலம், பொன் வேயப்பெற்ற மேற்கூரையையுடையதாகவும் மேலே ஒன்பது கலசங்களையுடையதாகவும், நாற்புறத்தும் சந்தனப் பலகைகளால் அடைக்கப்பெற்றதாகவும், கிழக்கிலும் மேற்கிலும் ஏறிச்செல்லுதற்குரிய திருவணுக்கன் திருவாயில்களைவுடையதாகவும் அமைந்துள்ளது. இதன் முகப்பில் நந்தியம் பெருமான் எழுந்தருளிய முக மண்டபம் அமைந்துள்ளது. சிற்றம்பலத்தின் எதிரேயுள்ள முக மண்டபத்தினையொட்டிக் கிழக்குப் பக்கத்தில் செப்புத்தகடு போர்த்தப்பெற்றதாய் கருங் கற்றுாண்கள் தாங்கப்பெற்றதாய் உள்ள மரக்கூரை அமைந்துள்ளது. இது, முன்மண்டபமாகிய கனகசபையிலே ஆறுகாலமும் சந்திர மௌலீஸ்வரராகிய படிகலிங்கத்திற்கு நிகழும் அபிடேகத்தை அன்பர் பலரும் நின்று தரிசித்தற்கெனவே அமைக்கப் பெற்றதெனத் தெரிகிறது. இங்கிருந்து வலமாகச் சிறிது மேற்கே சென்றால் தென்பாலுகந்தாடும் தில்லைச் சிற்றம்பலப் பெருமான் சந்நிதியை அடையலாம். இங்கு நின்ற வண்ணமே அம்பலவர் திருக்கூத்தினைக் கண் தரிசிக்கலாம். சிற்சபையிலுள்ள சிதம்பர ரகசியத்தையும் கூத்தப்பெருமானையும் சிவகாமியம்மையையும் அணுகிச் சென்று வழிபடுவோர் சிற்சபையாகிய சிற்றம்பலத்திற்கும் கனகசபையான முன் மண்டபத்திற்கும் இடையே மேற்புறத்தும் கீழ்ப்புறத்தும் அமைந்த திருவணுக்கன் திருவாயில் வழியாக ஏறிச்சென்று முன் மண்டபத்தில் நின்று கண்டு தரிசித்தல் மரபு. முன் மண்டபமாகிய கனகசபையில் கூத்தப்பெருமானை நோக்கிய நிலையில் நந்தியம் பெருமானது திருவுருவம் அமைந்துள்ளது. தில்லைச் சிற்றம்பலவனைப் பூசிக்கும் தில்லைவாழந்தணர்கள் கனக சபையிலிருந்து சிற்சபையினுள்ளே செல்லுதற்குரிய இணைப்பாக ஐந்துபடிகள் அமைக்கப் பெற்றுள்ளன. இப்படிகள் பஞ்சாட்சரப்படிகள் என வழங்கப்பெறும். இப்படிகளின் இருபுறத்தும் இவற்றைத் தாங்கும் நிலையில் துதிக்கை யுடையகளிற்றின் {யாளியின்) கைகள் அமைந்துள்ளமையால், இதனைத் திருக்களிற்றுப்படியென வழங்குதல் சைவ இலக்கிய மரபாகும். திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார் திருவுந்தியாரின் வழி நூலாக இயற்றிய நூலை இப்படியில் வைத்தபோது, இப் படியிலமைந்தகளிறு இத்நூலைக் கூத்தப் பெருமான் திருவடியில்