பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

49

வைத்தது என்றும் அதுபற்றி அந்நூல் திருக்களிற்றுப்படியார் எனப் பெயர்பெற்ற தென்றும் வழங்கும் வரலாறு இம் மரபினைக் குறிப்பதாகும்.

கூத்தப் பெருமான் அம்மைகாண ஆடல்புரியும் அம்பலத்தைத் திருச்சிற்றம்பலம் எனவும், அவ்வம்பலத்தின் மேல் பொன்வேயப் பெற்ற முகடாகிய புறப்பகுதியைப் பேரம்பலம் எனவும் ஞான சம்பந்தப் பிள்ளையார் குறிப்பித்துப் போற்றியுள்ளார்.

"நிறைவெண் கொடிமாடம் நெற்றி நேர்தீண்டப்
பிறைவந் திறைதாக்கும் பேரம் பலந்தில்லைச்
சிறைவண் டறையோவாச் சிற்றம் பலமேய
இறைவன் கழலேத்து மின்ப மின்பமே”-- என வரும்

திருப்பாடல் பொன்மன்றத்தில் இறைவன் ஆடல் புரியும் உள்பகுதியைச் சிற்றம்பலம் எனவும், பொன் வேய்ந்த மேற்பகுதிபைப் பேரம்பலம் எனவும் குறித்துப் போற்றியுள்ளமை காணலாம். திருநாவுக்கரசுப் பெருமான் இச்சந்நிதியைத் தில்லைச் சிற்றம்பலம் எனவும் தில்லையம்பலம் எனவும் பாடிப் போற்றியுள்ளார். திருமூலநாயனார் பொன்னம்பலம் என இதனைப் போற்றுவதால் அவர் காலத்திலேயே இம்மன்றம் பொன்னினால் வேயப் பெற்றிருந்தது என்பது நன்கு விளங்கும். வானுலகத்து உள்ள தேவர்களே தில்லைப்பெருமானைத் தொழுது போற்றி இவ்வம்பலத்தைப் பொன்னினால் வேய்ந்தார்கள் எனக்கோயிற் புராணம் கூறும். இக்கூற்றுக்கு ஆதாரமாக,

“முழுதும் வானுல கத்துள தேவர்கள்
தொழுதும் போற்றியுந் தூயசெம் பொன்னினால்
எழுதி மேய்ந்தசிற் றம்பலக் கூத்தனை
இழுதை யேன்மறந் தெங்ஙனம் உய்வனோ" -என வரும்

திருநாவுக்கரசர் திருக்குறுந்தொகை அமைந்துள்ளது. இத்திருப் பாடலில் தூய செம்பொன்னினால், எழுதிமேய்ந்த சிற்றம்பலம் என திருநாவுக்கரசுப்பெருமான் குறிப்பிடுதலால் இவ்வம்பலத்தில் வேயப்பெற்ற பொற்றகடுகள் ஒவ்வொன்றிலும் திருவைந்தெழுத்து எழுதப்பெற்றுள்ளமை அறியப்படும். திருச்சிற்றம்