பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

“அருமான வாண்முகத்தாள் அமர்ந்து காண
அமரர்கணந் தொழுதேத்த ஆடு கின்ற
பெருமானைப் பெரும்பற்றப் புலியூ ரானை"

எனவரும் திருநாவுக்கரசர் வாய்மொழியாலும், இத்தொடர்ப் பொருளை விரித்து விளக்கும் முறையில்,

"பாலுண்குழவி பசுங்குடர் பொறாதென
நோயுண் மருந்து தாயுண் டாங்கு
மன்னுயிர்த் தொகுதிக் கின்னருள் கிடைப்ப
வைய மீன்றளித்த தெய்வக் கற்பின்
அருள் சூற்கொண்ட வையரித் தடங்கண்
திருமாண் சாயல் திருந்திழை காணச்
சிற்சபை பொனியத் திருநடம் புரியும்
அற்புதக்கூத்த” (சிதம்பர மும்மணிக்கோவை-2)

என வரும் குமரகுருபரர் வாய்மொழியாலும் இனிது புலனாதல் காணலாம்.

திருஞான சம்பந்தர்

மூவர் அருளிய தேவாரத்திருப்பதிகங்களுள் தில்லைக்குரியனவாகத் திருஞானசம்பந்தர் அருளிய திருப்பதிகங்கள் இரண்டும், திருநாவுக்கரசர் திருப்பதிகங்கள் எட்டும், சுந்தரர் திருப்பதிகம் ஒன்றும் ஆகப் பதினொரு திருப்பதிகங்கள் கிடைத்துள்ளன. தில்லைப்பதியை யடைந்த திருஞானசம்பந்தர். அண்ணலார் தமக்கு அளித்த ஞானமேயான அம்பலமும் தம் உள்ளத்தில்லா நிறைந்த ஞானத்தின்கண் நிகழும் ஆனந்தமாகிய ஒருபெருந் தனிக் கூத்தும் ஆகிய தமது அகக்காட்சியினைத் தில்லைச் சிற்றம்பலத்திலே - புறக்காட்சியாகவும் - கண்ணாரக்கண்டு கும்பிட்டார். “உணர்வின் நேர்பெற வருஞ் சிவபோகத்தினை உருவின்கண் அணையும் ஐம்பொறிகளவினும் - எளிவர அருளினை” என்று கூறித் தில்லையம்பலவாணரை வணங்கிக் ‘கற்றாங்கு எரியோம்பி’ என்னும் பதிகத்தைப் பாடித் தில்லை வாழ் அந்தணர்களைச் சிறப்பித்தருளினார். திருவேட்களத்தினைத் தங்குமிடமாகக் கொண்டு, காலந்தோறும் அம்பலவாணரை வழிபட்டு மகிழ்ந்தார். திருவேட்களத்திலிருந்து