பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142

தொல்காப்பியம்-நன்னூல்



நீண்ட ஐகார வீற்று இடைச்சொல்லும், யாவென்னும் வினாவினை முதற்கண் உடைய ஐகார வீற்றிடைச் சொல்லும் வல்லெழுத்து மிக்கு முடிவனவும் உறழ்ச்சியாய் முடிவனவும் மேற் சொல்லப்பட்ட இடத்தின்கண்ணே உளவென்று கூறுவர் -,

   (உ-ம்) அதோளிக் கொண்டான், இதோளிக் கொண்டான். ஆண்டைக் கொண்டான், யாண்டைக் கொண்டான், இவைமிக்கன. அவ்வழி கொண்டான். அவ்வழிக் கொண்டான், எவ்வழி கொண்டான், எவ்வழிக் கொண்டான், யாங்கவை கொண்டான், யாங்கவைக் கொண்டான் இவை உறழ்ந்தன.
   சொல்லிய மருங்கு என்றதனால் பண்டைச் சான்றோர், ஒரு திங்களைக் குழவி எனப் பிற ஐகாரவீறு மிக்கு முடிதல் கொள்வர் இளம்பூரணர்.
     நெடியதன் முன்னர் ஒற்றுமெய் கெடுதலும் 
     குறியதன் முன்னர்த் தன்னுரு பிரட்டலும் 
     அறியத் தோன்றிய நெறியிய லென்ப. (தொல்.180) 
   
   இது புள்ளிமயங்கியலை நோக்கியதோர் நிலைமொழிக் கருவி கூறுகின்றது.
   (இ-ள்) நெட்டெழுத்தின் முன் நின்ற ஒற்றுத் தன் வடிவு கெடுதலும், குற்றெழுத்தின் முன் நின்ற ஒற்றுத் தன் வடிவு இரட்டித்தலும் அறியும்படி வந்த முறைமையியல் என்பர் ஆசிரியர்.
   ஈண்டு குறுமையும் நெடுமையும் அளவிற் கோடலின் தொடர்மொழி எல்லாம் நெட்டெழுத்தியல’ (தொல்-எழுத்து 50) என்றபடி குறில் இரண்டு முதலாகத் தொடர்ந்ததனையும் நெடியதென்று குறிப்பிட்டார் ஆசிரியர்.
   இங்ஙனம் நெடியதன் முன்னர் ஒற்றுக்கெடுவன னகாரமும், ணகாரமும், மகாரமும், லகாரமும், ளகாரமும் என ஐவகையாம் என்பர் நச்சினார்க்கினியர்.
   (உ-ம்) கோண் + நிமிர்ந்தது = கோணிமிர்ந்தது; தான் + நல்லன் = தானல்லன்; தாம் நல்லர் = தாநல்லர்; வேல் + நன்று = வேனன்று தோள் + நன்று = தோணன்று எனவும், கோல் + தீது = கோறீது; வேல் + தீது = வேறிது எனவும், நகரமும் தகரமும் வருமொழியாய் வருமிடத்து நெடியதன் முன்னர் ஒற்றுக்கெட்டன. மண் + அகல் = மண்ணகல்; பொன் அகல்