பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

195



146. பகைவர்கள் பெரும்பாலும் அழிந்தனர்

கைபர் பிரதேசம் தங்களுடைய கட்டுப்பாட்டின் கீழ் வந்ததும், அதை இரண்டு பங்காக்கி, ஒரு பங்கைப் பொது நிதிக்கு ஒதுக்கி, அதாவது விருந்தினர், தூதர்களுடைய செலவுக்காக ஏற்படுத்தி வைத்தனர்.

மற்றொரு பங்கு, போரில் கலந்து கொண்ட யுத்த வீரர்கள் அனைவருக்கும் சமமாகப் பங்கிட்டுக் கொடுக்கப் பட்டது.

வீதாசாரப்படி பெருமானார் அவர்களுக்கும் பங்கு கிடைத்தது. கைபரின் வெற்றிக்குப் பின், முஸ்லிம் அரசியல் நிலைமையில் ஒரு புது மலர்ச்சி தோன்றியது.

இஸ்லாத்துக்கு முக்கியமாகப் பகைவர்கள் இரு வகையாக இருந்தனர். அவர்கள் குறைஷிகளும், யூதர்களும் ஆவார்கள்.

கிறிஸ்துவர்கள், அரேபியாவில் இருந்த போதிலும், அவர்களுக்குப் போதிய வலிமையோ செல்வாக்கோ இல்லை.

குறைஷிகளும் யூதர்களும் கொள்கை வேறுபாடு உடையவர்களானாலும், இஸ்லாத்தைத் தாக்குவதற்கு மட்டும் அவர்கள் ஒன்று சேர்ந்து கொள்வார்கள்.

கைபரின் வெற்றிக்குப் பின், யூதர்களின் வலிமை அடியோடு குன்றிவிட்டது. பொருளாதாரத்திலும் அவர்கள் நிலை சரிந்து விட்டது.

அதன்பின் குறைஷிகள் மட்டுமே எஞ்சி இருந்தார்கள். இதுகாறும் பகைவர்கள் அதிகமாக இருந்தமையால், மத சம்பந்தமான அறிவுரைகளைப் போதிப்பதற்கு முழு நேரமும் செலவிட வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.

யூதர்களின் முறியடிப்பு, ஹுதைபிய்யா உடன்படிக்கை இவற்றால் மார்க்கப் போதனை செய்வதற்கு வாய்ப்பும் வசதியும் உண்டாயிற்று.