பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

197



பெருமானார் அவர்கள் ஒட்டகத்தில் கம்பீரமாக அமர்ந்து, நெருங்கிய தோழர்கள் முன்னும் பின்னும் சூழ்ந்து வர, மக்காவுக்கு வருகை புரிந்தார்கள். இதர யாத்திரிகர்கள் ஒட்டகங்களிலும், நடந்தும் தொடர்ந்து வரலானார்கள்.

ஏழு ஆண்டுகளுக்குப் பின், இப்பொழுதுதான் மக்காத் திருநகரையும் கஃபாவையும் பெருமானார் அவர்கள் கண்டார்கள். அந்தக் காட்சியில் அவர்களுடைய உள்ளமும், உடலும் மகிழ்ச்சியால் பூரித்துப் போயின.

பெருமானார் அவர்கள் கஃபாவைச் சுற்றி வந்து, 'உம்ரா'வின் சடங்குகளைச் செவ்வனே நிறைவேற்றினார்கள்.

மதீனா பள்ளிவாசலில் தொழுகையை நடத்துவது போல், மக்காவிலும் பெருமானார் அவர்கள் தொழுகையை நடத்தி வைத்தார்கள்.

மக்கா வாசிகள், இவற்றையெல்லாம் கண்டு வியப்பு மேலிட்டு, பிரமித்து விட்டார்கள்.

குறைஷிகளுக்குச் சலுகை காட்டி, அவர்களைத் தங்களோடு இயையும்படி செய்வதற்காக, அப்பாஸ் அவர்களின் மைத்துனி மைமுனா நாச்சியாரைப் பெருமானார் அவர்கள், திருமணம் செய்து கொண்டார்கள். அதனால் மக்காப் பிரமுகர்கள் பலர் பெருமானார் அவர்களைப் பின்பற்ற முன் வந்தார்கள்,

பெருமானார் அவர்களும், ஏனையோரும் மக்காவுக்கு வந்து மூன்று நாட்கள் ஆகிவிட்டன. எனவே, நிபந்தனைப்படி, வந்தவர்கள் திரும்பிப் போய் விட வேண்டும் எனப் பெருமானார் அவர்களிட்ம் குறைஷிகள் சார்பாக ஸுஹைல், ஹுவைதிப் ஆகியவர்கள் வந்து சொன்னார்கள்.

அன்று இரவே, பெருமானார் அவர்கள், தங்களைச் சார்ந்தவர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு, மக்காவை விட்டுப் புறப்பட்டார்கள்.