பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

31



அவர்களுடைய உயர் பண்பால் உள்ளம் நெகிழ்ந்த ஜைது, பெருமானார் அவர்களை விட்டுப் பிரிய மனம் இல்லாதவராய், அவர்களின் காலடியிலே என்றும் இருந்துவிட்டார்.

ஜைது அடிமையான செய்தியை அறிந்த அவருடைய தந்தை, மகனை விடுவித்து அழைத்துப் போவதற்காகத் தேவையான பொருளை எடுத்துக் கொண்டு, தேடி வந்தார்.

அவர் மக்கா வந்ததும், தம் மகன் விடுதலை அடைந்த தகவல் தெரிய வந்தது. மகனைத் தம்மோடு வீட்டுக்கு வருமாறு அழைத்தார்.

“அருமைத் தந்தையே! நான் விற்கவும் வாங்கவும் முடியாதபடி, பெருமானார் அவர்களின் அடிமையாகி விட்டேன். மேலும், அவர்களின் மேன்மைக் குணங்கள், பெற்றோரின் அன்பையும், சொந்த வீட்டின் சுகத்தையும் மறக்கச் செய்து விட்டன!” என்று உள்ளம் கனியக் கூறி, தந்தையை அனுப்பி விட்டார் ஜைது.

அடிமையாயிருந்த ஜைதை, சுதந்திர மனிதனாக்கியதோடு அல்லாமல், தம் சொந்த மாமி மகள் ஜைனப் நாச்சியாரையும், அவருக்குத் திருமணம் செய்து வைத்தார்கள் பெருமானார்.


19. சிந்தனைச் சிறப்பு

ஆண்டவன் ஒருவனே என்பதை மறந்து, மக்கள் விக்கிரக வழிபாடு செய்வதை எண்ணி, எண்ணிப் பெருமானார் அவர்கள் வருந்துவார்கள்.

அரேபியா முழுவதும் அக்காலத்தில், விக்கிரக ஆராதனை அதிகமாகப் பரவியிருந்தது. கஃபாவில் மட்டுமே 360 விக்கிரகங்கள் நிறைந்திருந்தன.

பெருமானார் அவர்கள் ஒருநாளும் விக்கிரகங்களுக்குத் தலை தாழ்த்தியது இல்லை. தவிர, அரேபியர்களிடம் இருந்த அறிவற்ற சடங்குகள், விழாக்கள் ஆகியவற்றில் ஈடுபடுவதும் இல்லை.

தங்கள் நாட்டின் அநாகரீகமும், உலகின் கேவல நிலைமையும் பெருமானார் அவர்கள் உள்ளத்தில் உறுத்திக் கொண்டிருந்தன.