பக்கம்:நல்வழி நயஉரை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
திருமண வாழ்த்து



திருமணச் செல்வர்கள்:
ப. முருகவேள் - பா. அன்பரசி


1. மண்ணரசி யாய்விளங்கும் புதுவைத் தாயின்
மடியினிலே, களித்தாடித் தூய்மை விஞ்சும்
எண்ணமதை இதயத்தின் இயற்கை ஆக்கி;
எவ்வுயிரும் தம்முயிர்போல் ஏற்றிப் போற்றி;
விண்ணளக்கும் திசையெல்லாம் புகழின் வாசம்,
வீசிடவே வாழ்ந்திட்ட சான்றோர் தம்முள்,
வண்ணமிகு சின்னாத்தா குடும்பம் என்றால்,
வாய்மணக்கும் வாழ்த்துரையின் முழக்கம் கேட்கும்.


2. தேடுகின்ற பொருளெல்லாம் தமக்கும், வீட்டுச்
சிறப்புக்கும் என்றிருப்போர் வாழும் நாட்டில்;
நாடெல்லாம் நம் உறவு; நாடும் செல்வம்
நல்லுறவில் பகிர்ந்துண்டு வாழ்தற் கென்றே;
தேடியநற் பொருளுக்கோர் பொருளை வைக்கும்
தெய்வமனப் பாங்காலே பெண்கள் கல்வி
நீடுயர வீடுமனை நிமிர்ந்த ளித்த
நெஞ்சத்தை நெஞ்சார வாழ்த்தா ருண்டோ?


3. எளிமைக்கு மறுபெயர்தான் ஈந்து வத்தல்;
ஈதலுக்கு மறுபெயர்தான் அறத்தின் காப்பு;
வளமைக்கு மறுபெயர்தான் சுற்றம் சூழல்;
வாழ்வுக்கு மறுபெயர்தான் இனிமைப் பண்பு;
அழகுக்கு மறுபெயர்தான் அன்பின் ஊற்றம்;
ஆற்றலுக்கு மறுபெயர்தான் நாட்டுப் பற்று;
முழுதுக்கும் மறுபெயர்தான் வைப்ப தென்றால்
முன்தோன்றும் சின்னாத்தா பெயர்தான் அங்கே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்வழி_நயஉரை.pdf/6&oldid=1289753" இலிருந்து மீள்விக்கப்பட்டது