பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

‘நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி’, ‘பழகு தமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில்’. இந்த இரண்டு தொடர்களும் நாலடியாரின் பெருமையையும் திருக்குறளின் சிறப்பையும் நன்கு காட்டுவன.

குறள் வெண்பாக்களால் ஆகிய நூலுக்குக் குறள் என்ற பெயர் ஏற்பட்டாற்போல, நாலடி வெண்பாக்களாலாகிய இந்நூலிற்கும் ‘நாலடி என்னும் பெயர் அமைந்தது. ‘ஆர்’ விகுதி சேர, அது நாலடியார் ஆயிற்று. நாலடியார், நாலடி நானூறு, வேளாண் வேதம் எனவெல்லாம் இதனைக் குறிப்பிடுவார்கள்.

திருக்குறள், கருத்துக்களைச் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கிறது; நாலடி, விளக்கமாகவும் இனிதாகவும் அனைவருக் கும் புலனாகுமாறும் எடுத்துச் சொல்லுகிறது. திருக்குறளின் விளக்கம்போல் இந்த நூல் போற்றப்பட வேண்டியதாகும். அதனைக் கற்பதற்குமுன் கற்கப்பட வேண்டிய அடிப்படை நூலுமாகும்.

வடநாட்டிலே, ஒரு சமயம் பெரிய பஞ்சம் ஏற்பட, சமண முனிவர்கள் எண்ணாயிரவர் பாண்டிய நாட்டைத் தஞ்சமாக வந்து அடைந்தனர். தமிழ் நாட்டிலே தங்கிய அவர்கள் தம் உடலைப் பேணியதுடன், தமிழென்னும் அமுதையும் பருகித் தமிழ்ச் சான்றோராகவும் சிறந்தனர். வடநாட்டுப் பஞ்சம் நீங்கியதும், அவர்தம் நாடுதிரும்ப விரும்பவும், பாண்டியன் அவரைப் பிரிய மனமின்றி விடைகொடாது காலந் தாழ்த்தினன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாடல் எழுதித் தம் காணிக்கையாகப் பாண்டியனுக்கும் தமிழுக்கும் வைத்துவிட்டு யாரும் அறியாதேயே, தம் நாடு சென்றுவிட்டனர்.

செய்தியறிந்த பாண்டியன் பெரிதும் வருத்தம் அடைந்தான். அந்த ஏடுகளை வையையிலே எறிய ஆணையிட்டான். அவற்றுள், வெள்ளத்தை எதிர்த்து வந்த ஏடுகள் 400. அவையே நாலடி நானூறாகத் தொகுக்கப் பெற்றன. போற்றிப் பேணப் பெற்றன. -