பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாலடியார் எழுந்த வரலாறு இப்படி வழக்காற்றிலே சொல்லப்படுகிறது.

கதை எப்படியானாலும், அதன் அமைதி நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது. வளமும் வண்மையும் பெருகியிருந்த தமிழகத்திலே, கள்ளுண்ணலும், புலால் உண்ணலும், பரத்தையர் உறவும், மற்றுஞ் சிலபல பழக்க வழக்கங்களும் நிலவியதைக் கண்ட சமணச்சான்றோர்கள், தவவாழ்வினரான முனிவர்கள், அவற்றை விடுத்தால் தமிழர் சமுதாயம் எவ்வளவு சிறப்புறும் என்று எண்ணத் தொடங்கினார்கள். அதன் பயனே, சமூக நடைமுறை அமைதிகளாக அவர்கள் ஆக்கிய பெரு நூல்கள் பலவாம். சமணம் இந்நாட்டினின்றும் பேரளவுக்கு மறைந்து விட்டாலும், இந்நூல் தமிழர் மரபியலோடு ஒன்றிக்கலந்து உயர்வுடன் ஒளிபெற்று விளங்குகின்றது.

இத்தகைய ஒப்பற்ற நூலுக்கு பால் இயல் அதிகார முறைமையும், தக்கதோர் உரையும் கண்டவர் பதுமனார். தருமர் மதிவரர் போன்ற பிற சான்றோர்களும் உரை கண்டனர்.

திருக்குறளின் துணையான இந்த நூல் தமிழக மெங்கும் பரவிப் பல்கித் தமிழ் அன்பர்களின் சிந்தனைகளுக்கு மெருகேற்றி, அவர்களை எல்லாம் சொல்லிலும் செயலிலும் உறுதியுடையோராகவும், வாழ்விலே உயர்வுடையோராகவும் ஆக்குதல் வேண்டும். அந்த ஆர்வமே இந்தத் தெளிவுரை அமைப்பிலே என்னைச் செலுத்தியது.

மல்லிகைப் பதிப்பகத்தார் இதன் முதற்பதிப்பினை வெளியிட்டுப் பரப்பும் பணியினை மேற்கொண்டனர். இரண்டாம் பதிப்பைக் காவேரி புத்தக நிலையத்தார் வெளியிட்டனர். மூன்றாம் பதிப்பினை தேன்.மழைப் பதிப்பகத்தார் வெளியிடுகின்றனர்.

இவர்களுக்கும் நாலடியின் நற் கருத்துக்களை நாடெல்லாம் பல்வகையானும் பரப்பி வரும் நற்றமிழ்ச் சான்றோர்களுக்கும் நன்றி கூறிக்கொண்டு, இதனை வழங்குகின்றேன். -

தமிழன்பர்கள் விரும்பி வரவேற்றுப் பயன்பெறுவர் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதுமே உண்டு.

1964 புலியூர்க் கேசிகன்.