பக்கம்:பச்சைக்கனவு.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 0 லா. ச. ராமாமிருதம்

அம்மா பூஜை அறையிலிருந்து கூப்பிட்டாள்.

என்ன காரணம் எங்களுக்கே தெரியவில்லை. சொல்லி வைத்தாற்போல், இருவரும் சேர்ந்தே நமஸ்கரித்தோம். அம்மா ஆசீர்வதித்தாள்.

'உட்காந்து கொள்ளுங்கள். ஒன்று சொல்லத்தான் உங்களைக் கூப்பிட்டேன்.'

நாங்கள் பேசாது காத்திருந்தோம்- சின்னக் குழந்தைகள் போல். .

'நீங்கள் இரண்டு பேருமே ரொம்ப கஷ்டப்பட்டு விட்டீர்கள். சுவாமி புண்ணியத்தில், மலைபோல் வந்தது பனிபோல் நீங்கியது. என் குழந்தை பிழைத்தது அந்தத் திருப்பதி வெங்கடாஜலபதியின் கிருபைதான் தவிர வேறு என்ன சொல்ல இருக்கிறது? என்றைக்கும் ஒன்று வைத்துக் கொள்ளுங்கள். சுவாமிமேல் பாரத்தைப் போட்டுவிட்டு எதைச் செய்தாலும் அவர் பார்த்துக்கொள்வார். நாம் இவ்வளவாவது உண்டு உடுத்து உயிர் வாழ்வதே அவரால் தான். அவனன்றி ஒரு அணுவும் அசையாது. எப்பவும் அவனை நம்புங்கள். அவனை நம்பி வேண்டிக் கொண்டேன். இவள் பிழைத்தாள். ஆகையால் இப்பொழுது வேண்டுதலையை நிறைவேற்றி விட வேண்டும். அவன் தன்னால் செய்ய வேண்டியதைச் செய்துவிட்டான். நம்முடைய பிரார்த்தனைதான் பாக்கி. தெய்வத்திற்குச் செலுத்த வேண்டியதை முன்னைக்கு முன்னால் செய்துவிடவேண்டும். அதை ஒத்திப்போடக் கூடாது. நான் தீர்மானம் பண்ணிவிட்டேன். ஞாயிற்றுக் கிழமை நல்ல நாளாயிருக்கிறது. திருப்பதிக்குப் புறப்படனும். இவள் மயிரை முடியிறக்குவதாக வேண்டிக் கொண்டிருக்கிறேன்!'

தலை சுழன்றது. அம்மா இன்னும் ஏன் மூச்சுவிடாமல் பேசிக்கொண்டே போகிறாள்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/49&oldid=590707" இலிருந்து மீள்விக்கப்பட்டது