பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ii பாடிய புலவர்: கீரந்தையார், கடுவன் இளவெயினனார். நல்லந்துவனார், மேயோடக் கோவனார், குன்றம் பூதனார், கரும்பிள்ளைப் பூதனார், நல்வழுதியார், நல்லெழுநியார், கேசவனார், இளம்பெருவழுதியார், நப்பண்ணனார், நல்லழிசியார், நல்லச்சுதனார் ஆகிய பதின்மூவர். - - பண் வகுத்தோர் . நன்னாகனார், பெட்டகனார், மருத்துவன் நல்லச்சுதனார், கண்ணகனார், பித்தாமத்தர், கேசவனார் ஆகிய அறுவர் பண் வகுத்துள்ளனர். - . - முதல் பன்னிரண்டு பாடல்களும் பாலையாழ் என்னும் பண்ணிலும்; அடுத்து வந்த அய்ந்து பாடல்கள் நோதிரம் என்னும் பண்ணிலும்; அடுத்து இறுதியாக வரும் நான்கு பாடல்கள் காந்தாரப் பண்ணிலும் அமைக்கப்பெற்றுள்ளன; இறுதிப் பாடலுக்குப் பண் தெரியவில்லை. - - - பரிபாடலின் காலம் கி.பி. 634 என்று எல்.டி. சாமிக்கண்ணு கூறியுள்ளார். கி.பி. மூன்றாம் நூற்றாண்டு என்று டாக்டர் மா. இராசமாணிக்கனார் கூறுகிறார். பலர் பலவாறு கூறினும் இன்றைக்கு ஆயிரத்து எழுநூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது பரிபாடல் என்று கொள்ளலாம். எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகிய இந்த ஓங்கு பரிபாடல் அகத்துறையும் புறத்துறையும் ஆகிய இருபொருள் பற்றிப்பாடப்பெற்ற நூலாகும. . . - - முதலில் இந்நூலைப் பதிப்பித்த பெருமை உ.வே. சாமி நாதய்யரையே சேரும். இவரை அடுத்துப் பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை பதிப்பித்துள்ளார். அவரை அடுத்து மீ. பொன். இராமநாதன் செட்டியார் உரையுடனும் தெளிவுரையுடனும் ஒரு பதிப்பினை வெளியிட்டுள்ளார். எத்தனை பதிப்பு வந்தாலும் அவை அத்தனையும் கடுமையான உரையுடனேயே வெளிவந்தன. இதனை உணர்ந்த புலியூர்க்கேசிகனார் எளிமையான உரையினை இயற்றினார். புலியூர்க்கேசிகனாரின்நூல்கள் நாட்டுடைமை ஆக்கிய பின் எங்களது பதிப்பகத்தில் அவரது நூல்களை வெளியிட்டு வருகிறோம். அந்த வரிசையில் இந்த நூலும் வெளிவருகிறது என்பது பெரு மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். - பல்கலைக் கழக கல்லூரி, பள்ளி மாணவர்க்கும் நூல் படிக்கும் ஆர்வம் உடைய அனைவர்க்கும் இஃது ஓர் அறிவுக் கண்ணாடி, மிகத் தெளிவாக எளிய முறையில் பொருளை விளங்கிக்கொள்ள இந்த நூல் பெரிதும் பயன்படும்; பயன்பெறுங்கள் என்று வேண்டுகின்றோம். பதிப்பகத்தார்