பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

154

பாப்பா முதல் பாட்டி வரை

உணவுக் குழல் அடைப்பு, சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு அறுவை சிகிச்சையே தீர்வு. இந் நோய்கள் வருவதற்கான காரணங்கள், இவை தான் என உறுதியாகக் கூற முடியவில்லை. அறிவியல் பூர்வமாகக் காரணங்களைக் கண்டுபிடித்துவிட்டால், நோய் வரும் முன்பே தடுத்து விடலாம். குழந்தைகளுக்கு வரும் பெரும்பாலான நோய்கள், கருவிலிருந்து ஆரம்பிக்கின்றன. காரணம் தெரியாமல் இருப்பதால், தடுக்க முடிவதில்லை. மேலும், பிறவிக் குறைகள் தனித்து ஒரு உறுப்பை மட்டும் பாதிப்பதில்லை. மற்ற உறுப்புகளையும் பாதிக்கிறது.

உணவுக் குழாய் அடைப்பு : வாய்க்கும், வயிற்றுக்கும் நடுவில் உணவுக்குழாய் உள்ளது. பிறக்கும் குழந்தைக்கு இதில் அடைப்பு ஏற்பட்டால், எச்சில் விழுங்க முடியாது. பிறந்த உடனேயே, வாய்க்கு வெளியே எச்சில் வழிவதே இதன் அறிகுறி. மருத்துவர்கள் ஒரு சிறிய குழாயை வாய் வழியே செலுத்தி, அடைப்பைக் கண்டு பிடித்து விடுவார்கள். அறுவை சிகிச்சை மூலம் அடைப்பை நீக்கி விடலாம். இரண்டு மணி நேரம் இந்த அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.

கருவில் குழந்தை இருக்கும்போதே உணவுக்குழாய் அடைப்பைக் கண்டு பிடிக்க முடியும். பனிக்குட நீர் எவ்வளவு இருக்க வேண்டும் என்று, நிர்ணயிக்கப்பட்ட அளவு உள்ளது. பனிக்குட நீர் அதிகம் இருந்தாலே கருவின் உணவுக் குழாயில் அடைப்பு உள்ளதோ என்ற சந்தேகம் மருத்துவர்களுக்கு எழ வேண்டும். பனிக்குட நீர் குறைவாக இருந்தால் சிறுநீர்ப் பாதையில் கோளாறு உள்ளதா என்று பார்க்க வேண்டும். பனிக்குட நீரைப் பொறுத்தே, கர்ப்பிணியின் வயிறு உப்பும் அளவு வெளிப்படுகிறது. எனவே, வயிறு அதிகமாக உப்பியிருந்தால், ‘பெண் குழந்தை’ என்று சொல்வது தவறான கருத்தாகும்.