பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

பாப்பா முதல் பாட்டி வரை

மணி, காலை 6 மணி என்று, இந்த வரிசையில் படிப்படியாகப் பசுப்பால் கொடுத்தும் வரவேண்டும். நாலைந்து வாரங்களில் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திப் பசும்பாலையே தரவேண்டும். அப்போது முன்கூறியபடி தயாரித்த பசும்பால், ஒவ்வொரு தடவையிலும் 8 அவுன்சு கொடுக்கலாம். இந்தப் பாலைப் புட்டியில் விட்டுக் கொடுக்காமல் கரண்டியில் எடுத்துக் கொடுப்பதே நல்லது. சிறு குவளையிலிருந்து குடிக்குமாறு குழந்தையைப் பழக்க வேண்டும்.

தாயிடம் பால் குடிக்க வைக்க முடியாத வேளையில், குழந்தைக்குப் புட்டிப் பால் தரலாம். அப் புட்டியில் தருவதற்கு, மேலே கூறியவாறு தயார் செய்த பாலே ஏற்றது.

புட்டியில் கொடுத்தால், குழந்தை பால் குடித்தவுடன், புட்டியையும், அதிலுள்ள காம்பையும் (Teat) முதலில் குளிர்ந்த நீரிலும், பிறகு மிகுந்த சூடுள்ள நீரிலும் கழுவ வேண்டும். காம்பின் உட்புறத்தை வெளியாக்கி, கறி உப்பால் தேய்த்துக் கழுவ வேண்டும். நாடோறும் ஒரு தடவை புட்டியையும் காம்பையும் வெந்நீரில் நன்றாகச் சுத்தம் செய்ய வேண்டும். எப்போதும் அவற்றைக் கழுவி எடுத்தபின் மறுபடியும் பயன்படுத்தும் வேளைவரை குளிர்ந்த நீரிலிட்டு வைத்திருக்க வேண்டும்.

ஒவ்வொரு தடவையும் குறிப்பிட்ட அளவு பால் சரியாக அளந்தே தரவேண்டும். புட்டியில் குடியாமல் எஞ்சிவிட்டால், அதை மறுபடியும் பயன்படுத்தலாகாது. பால் கொடுக்க வேண்டிய பொழுதுகள் தாய்ப்பாலுக்குக் கூறியனவே ஆகும். குழந்தையை எடுத்து மடியில் வைத்துக் கொண்டே பால் கொடுக்க வேண்டும். குழந்தை கட்டிலிலுள்ளவாறே, அதற்குப் புட்டிப்பால் தரலாகாது.