பக்கம்:பாரதியின் இலக்கியப் பார்வை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இலக்கியப் பார்வை


-என்னும் அவரது ஓலத்தில் அவர் தமிழச் சாதியின்பால் கொண்டிருந்த பரிவும், கவற்சியும் பின்னிப் பின்னித் தோன்றுகின்றன.

தமிழ்ப் பண்பாடும், அதை யொட்டிய பெருந்தகவும் தமிழரிடையே நாளுக்கு நாள் அருகின; அவற்றிற்கும் தமிழர்க்கும் இயல்பாய் அமைந்திருந்த தொடர்பு காலத்திற்குக் காலம் நெகிழ்ந்தது. அந்நெகிழ்ச்சி காலஞ் செல்லச் செல்ல நெக்குவிட்டது. போகப் போக விரிந்தது; இடைவெளி உண்டாயிற்று. இடையே இடையீடுகள் புகுந்தன. இவ்விடையீடுகள் பலப்பலவாய் விரியினும், யாவற்றையும் வகையுள் அடக்கி அவ்வகைகளையும் சுருக்கித் தொகுத்தால் ஒரு சிலவாகவே அமையும். அவற்றுள் ஒன்று இலக்கியப் பயிற்சி அருகியமை எனத் தெளிவாகக் கூறலாம். அவ்விலக்கியப் பயிற்சி அருகியதற்கும் பல்வகை. இடையீடுகள் உண்டு. அவற்றுள் ஒன்றைப் பாரதியார் தெளிவாக்கினார்.

இந்தியப் பெருநாட்டில் இடம் பிடித்த வெள்ளையர் ஆட்சி இந்நாட்டுத் தகவுகளை இந்நாட்டவரே அறியவும் கைக்கொள்ளவும் இயலாமல் தடை செய்தது. இதனைத் தேர்ந்து தெளிந்த பாரதியார் வெள்ளையர் ஆளுகையில் அமைந்த கல்வி முறையை உற்று நோக்கினார். வேற்றார்தம் மொழியாம் ஆங்கிலத்திற்கும், அவர்தம் நெறிக்கும் அமைக்கப் பட்ட ஏற்றத்தை நோக்கினார். அதனால் தத்தம் பெருநாட்டின் பெருமைகளும் நற்குறிக்கோள்களும் நேரிய வழி காட்டிகளும் அவற்றைப் படைத்தோரும் கல்வித் துறைகளினின்றும் ஒதுக்கப் பட்டிருந்ததையும் நோக்கினார். இது பாரதியாரின் உள்ளத்தே ஊசி முனையாய்க் குத்தியது.

13