பக்கம்:பாரதியின் இலக்கியப் பார்வை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதியின்




கண்ணகியார் ‘சிலம்புகள் உள்ளன: பெற்றுக்கொள்ளும்’ என்றார். இங்குதான் சிலம்பு முதற்காட்சி விளங்குகின்றது.

மதுரையில் இடைக்குல மடந்தை மாதரியின் இல்லத்தில் கண்ணகியாரும் கோவலனும் தங்கினர். சிலம்பு விற்பனைக்கு நோட்டம் காணப் புறப்படும் கோவலன், ‘உனது சிறிய அடியில் அணிந்திருந்த சிலம்புகளில் ஒன்றைக்கொண்டு சென்று விற்பனைக் களமறிந்து வருவேன்’-என்று சொல்லி ஒரு சிலம்பைப் பெற்றுப் புறப்பட்டான். இங்கு இரண்டாவது காட்சி வழங்குகின்றது சிலம்பு.

இவ்விரண்டு இடங்களிலும் சிலம்பு குறிக்கப்படுகிறதேயன்றி அதன் தன்மையோ, அமைப்போ பேசப்படவில்லை.

அடுத்துக் கோவலன் பொற்கொல்லனைக் காண்கின்றான். ‘அரசிக்கு ஆவதோர் சிலம்பு உள்ளன. அதனை விலையிடுவையோ, என்று கோவலன் பொற்கொல்லனிடம் கூற, அவனும் இசைய, கோவலன் பொதிந்து வைத்திருந்த பொதியை அவிழ்த்தான். சிலம்பு காட்சியளித்தது. பொற்கொல்லனை பொற்கொல்லன் காண்கின்றான். இளங்கோவடிகளார் இங்குதான் சிலம்பை முதன் முதல் வண்ணிக்கின்றார்.

இச்சிலம்பு, ‘கிளிச்சிறை என்னும் பசும் பொன்னால் செய்யப்பட்டது. சித்திர வேலைப்பாடுகள் நிறைந்தது, அதன் கூடுவாய் மேடாக இருக்கும். அம்மேட்டில் ஒரு குழி (கேவணம்) யையும் கொண்டது. அக்குழியில் ஒளிக்கதிர் வீசும் கல் ஒன்று பதிக்கப்பட்டுள்ளது. இக்கல்லோடு வயிரமும் சேர்த்துக் கட்டப்பட்டுள்ளது.’

44