பக்கம்:பாலைக்கலி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 கலித்தொகை மூலமும் உரையும் உறிஞ்சிப், போய்க் கொண்டிருக்கும் தம் உயிரைப் போக விடாமல் தாங்கிக் கொண்டிருக்கும். மழை துளி கூடப் பெய்யாது மாறுபட்டுப் போன, கடந்து போவதற்கும் அரியதான, வெம்மைமிக்க பாலை நிலத்தின் தன்மை இதுவாகும். ஒளிரும் வளையணிந்தவளே! என்னோடு நீ வந்தால், சிறப்புடைய மென்மைவாய்ந்த நின் சிறிய திருவடிகள் அவ்வழியிலே நடத்தலைத் தான் தாங்குமோ தாமரை மலரின் உள்ளிதழ் போன்றவான நின் பாதங்கள், அரக்கினை நெருப்பிலே தோய்த்தாற் போலப், பரற்கற்களிலே பட்டவுடன் கன்றிக் கறுத்து விடுவன அல்லவோ! நலம் பெற்ற ஒளிவிடும் நெற்றியை உடையவளே! என்னோடு நீயும் வந்தால், உன் நிலைதான் என்னவாகும்? சிங்கக் கால்களின் மேல் அமைத்த தூங்கும் மஞ்சத்திலே, மாட்சியுடைய அன்னத்தின் தூவி போன்ற மென்மையான படுக்கையிலே உறங்குபவள் நீ. அக் காட்டினுள், சிங்கத்தின் உண்மையான குரலையே கேட்பாயானால், பயந்து வெருவுவை அல்லவோ? கிளிபோன்ற மொழியாளே! என்னோடு நீ வந்தால், மழை பெய்ததும் துளிர்க்கின்ற மெல்லிய பூந்தளிரைப் போன்ற அழகிய துன் மேனியின் அழகெல்லாம் கானலால் வாடி விடுமே? புதர்கள் மறைவிலே பற்றி எரியும் காட்டுத் தீயில் ஊடாடி வரும் தீக்காற்றுப் பட்டால், நின் மேனியின் அழகும் வாடிவிடும் அல்லையோ? என்று நின் காதலர் சொல்வதால், நம்மை அவர் ஏதோ தொழிலின் பொருட்டாகப் பிரியப் போகின்றார் போலும்’ என்று எண்ணிப் பெரிதும் நெஞ்சழிந்து நீயும் துடிக்காதே. வளைவான குழையணிந்தவளே! வளம் திரிவுற்றுக் கடுமையாக விளங்குவது காடு’ என்று அவர் சொன்னாரென்றால், அது நீ நடுங்குவதைக் கண்டு நகைத்து மகிழ்வதற்கேயாகும், என உணர்வாயாக. விளக்கம்: காட்டின் கொடுமையையும், அங்குச் சென்றால் நீ வாடும் வாட்டத்தையும் அவர் வாயாலேயே விரித்துச் சொல்வதால், அவர் பிரிந்துபோகும் எண்ணமுடையவரன்று என்று தோழி உய்த்துரைக்கின்றனள். பாதம் கன்றிவிடும் என்றது வழியின் அருமையையும், சிங்கக் குரல் கேட்கும் என்றது, இடையிலே கொடு விலங்குகளால் துன்பம் உண்டென்பதையும், தீக்காற்றுப் படின் அழகு கெடும் என்றது மனைவியின் அழகைப் பேணும் ஆண்மையின் நிலையையும் கூறியதாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைக்கலி.pdf/42&oldid=822034" இலிருந்து மீள்விக்கப்பட்டது