பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் *9

அப்பவும் பாக்கியம் பிள்ளை புலம்பத்தான் செய்வான். புலப்பம் அவனைப் பிடித்திருக்கிற தீராத வியாதி.

‘அப்பா நான் பாஸ் பண்ணிட்டேன்’னு பையன் சந்தோஷமாகச் சொல்ல வாறான். இவனுக்கும் உள்ளுக் குள்ளே திருப்திதான். இருந்தாலும் வெளியே காட்ட மாட்டான். இதுக்கு ஒரு துள்ளாட்டமா? நீரு பட்ட கஷ்டம் ரொம்பவாக்கும். தெரியாதோ! நான் பணத்தைப் பணமின்னு பாராமல், வாரி வாரிச் செலவளிக்கப் போய்த்தானே உம்மாலே படிக்க முடிஞ்சிது? எங்க அப்பன் எனக்காகப் படிப்புச் செலவுயின்னு ஒரு ரூபா கூடக் காலி பண்ணல்லே. அவரும் நோட்டு நோட்டா எடுத்து விட்டிருந்தால், நானும்தான் பாஸ் பண்ணியிருப்பேன்! என்றுதான் இவன் பேசுவான்.

மேல் படிப்பு படிக்க வைப்பான். ஆனால் தினம் ‘உன்னாலே ஏகப்பட்ட பணம் செலவு. எவ்வளவு பணம் காலியாகுது!’ என்று குத்திக்கொண்டே இருப்பான். இதுவரையும அப்படிச் செய்தவன்தானே? செல்லையா உணர்ச்சி மிகுந்தவன். ஏசுறது அப்பன்தான்னு சொன்னாலும் பையனுக்கு எருமைமாட்டுத் தோலு இல்லை பாருங்க, சுடுசொல் தாங்க முடியாமல், அடிக்கடி மனம் புழுங்கி மெளனமாகக் கண்ணிர் வடிப்பான். வே, பையன் சாப்பி டறதைப் பார்த்துக்கூட வயிறு எரிவான் ஐயா இவன். வேளைக்கு அஞ்சு தோசையை முறிச்சு உள்ளே தள்ளுறான். பத்து இட்லி வெட்டுதான். சோறுயின்னு சொன்ன ஒரு புடி புடிக்கிறான். இந்தத் தீவனம் இருக்கப்படாது. நிறையத் தீனி தின்னால் அறிவு மந்திச்சுப் போகும். வயிறு காயக்காய, மூளை சுறுசுறுப்பாக வேலை செய்யும். படிக்கிற பையன் அரை வயிறு முக்கால் வயிறுதான் சாப்பிடணும் என்கிறான் ஐயா தகப்பன்காரன். இந்த வயித் தெரிச்சலை பையன் எத்தனை காலம் சகிக்க முடியும்? அவன் செய்தது கரெக்ட்!