பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 பூர்ணசந்திரோதயம்-2 மேனி, காற்றில் அசையும் மாந்தளிர்போலக் கிடுகிடென்று நடுங்குகிறது; எந்த நிமிஷத்தில் அந்த முரடர்கள் உள்ளே நுழைந்து தன்னை மறுபடியும் பலாத்காரம் செய்து துக்கிக்கொண்டு போவார்களோ என்ற பெரும் பீதி கொண்டவளாய், நெருப்புத் தணலின் மேல் நிற்பவள் போலத் தவிக்கலானாள். அந்த இரவு கழிகிற வரையில் அவர்கள் இருவரும் நரகவேதனை அனுபவித்தவர்களாய் விவரிக்க வொண்ணாத பெருங்கவலையும், கிலியும் கொண்டு, பேச்சு மூச்சற்று அச்சமே வடிவாக உட்கார்ந்திருந்தனர். வெளியில் ஏதாவது அற்ப ஓசை உண்டானதானாலும், அந்த முரடர்கள் உள்ளே வந்துவிட்டார்கள் என்று நிச்சயித்து நடுநடுங்கி வேர்த்து விருவிருத்துக்கையைப் பிசைந்து கொண்டு உட்கார்ந்திருந்தனர். கடைசியில் பொழுதும் விடிந்தது; சூரியன் உதயமாகி நெடுந்துரம் உயர்ந்துவிட்டான். கதவுகள் மூடப்பட்டி ருந்தாலும், பகலின் வெளிச்சம் உட்புறத்தில் எல்லாம் பளிச்சென்று வீசியது. ஆகையால், அவர்களது சஞ்சலமும் அச்சமும் ஒருவாறு குறைந்தன. பங்களாவிற்கு வெளியில் நான்கு பக்கங்களிலும் ஜனங்கள் பேசிக்கொண்டு நடமாடியதும் தெரியவே, தாங்களும் கதவைத் திறந்துகொண்டு வெளியில் போகலாம் என்ற துணிவும் உற்சாகமும் உண்டாயின. ஆகவே, முத்தம்மாள் சந்தடி செய்யாமல் ஒரு ஜன்னலின் கதவைத் திறந்துகொண்டு மெதுவாக வெளியில் பார்க்க, பங்களாவின் முன்புறத்தில் மனிதரே காணப்படவில்லை. முன்னிலும் அதிக தைரியம் அடைந்த முத்தம்மாள் உடனே கதவுகளையெல்லாம் திறந்துவைத்து விட்டு ரஸ்தா வரையில் போய்ப் பார்த்து, இரும்புக் கம்பிக் கதவுகளையும் திறந்து வைத்துவிட்டு, தோட்டம் முழுதும் சுற்றிப்பார்த்து, உட்புறத்தில் ஏதேனும் காலடிச்சுவடுகள் இருக்கின்றனவா என்பதை ஆராய்ந்து பார்த்தாள். பங்களாவின் உட்புறத்தில் அன்னிய மனிதரின் காலடிச்சுவடே காணப்படவில்லை. உடனே அவள் செய்தியை ஷண்முகவடிவினிடம் போய்த் தெரிவித்தாள்.