பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

151

சடலத்துக்கும் (மையத்) போர்த்தப்படுகிறது. எனவே இந்த எஹ்ராம் எனும் வெள்ளுடை அணியும் ஹஜ் பயணி தனது மரணத்தையே நினைவு கூர்பவராகிறார்.

வடலூர் இராமலிங்க வள்ளலார் ‘எஹ்ராம்’ போன்ற வெள்ளுடையையே இறுதிவரை அணிந்து வந்தார் என்பது நினைவு கூரத்தக்கதாகும்.

ஒருமை உணர்வு தரும்
கஃபா இறையில்லம்

ஹஜ்ஜின்போது இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் கஃபா இறையில்லத்தில் கூடுகின்றனர். எல்லோருமே ஒரே மாதிரி சீருடையில் தைக்கப்படாத இரு துண்டுத் துணிகளை அணிந்தவர்களாக காட்சி தருகின்றனர். பல்வகைப்பட்ட மொழிகளைப் பேசுபவர்களாக இருந்த போதிலும் அங்கு ஒரே மொழியில் அரபியில் இறைவணக்கம் புரிகின்றனர். வேற்றுமைகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட மகத்தான ஒற்றுமையை சமத்துவத்தை சொல்லிலும், செயலிலும் இறைவன்முன் நிலைநாட்டுகின்றனர்.

ஹஜ் கடமை
நிறைவேற்றம்

கஃபா இறையில்லத்தை ஹஜ் செய்வோர் ஏழு முறை ‘தவாப்’ சுற்ற வேண்டும். ‘தவாப்’ என்ற அரபுச் சொல்லுக்கு ‘சுற்றி வருதல்’ என்பது பொருளாகும். அதன்பின் அருகிலுள்ள ஜம்ஜம் கிணற்று நீரைக் குடித்து விட்டு சஃபா மருவா என்னும் இரு குன்றுகளிடையே ஏழு முறை தொங்கலோட்டம் ஓட வேண்டும்.

இக்கடமைகளை இனிது நிறைவேற்றிய ஹாஜிகள் அடுத்து மக்காவிலிருந்து சற்று தொலைவில் அமைந்துள்ள மினா என்னுமிடத்தை அடைந்து, தங்கி இறைவணக்கம் புரிவார்கள்.