பக்கம்:பொன் விலங்கு.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி - . 247

சோம்பல்படுகிற மனிதர் களைவிட நினைப்பதற்கே சோம்பல் படுகிற மனிதர்கள் நம்மிடையே அதிகமாக இருக்கிறார்கள். மனத்தினாலும் சிந்தனையினாலும் அடிமைப்பட்டுக் கிடக்கிறோம் என்பதற்கு இது ஓர் அடையாள மாகும்." -

உணர்ச்சிகரமாகச் சத்தியமூர்த்தி கூறிய இந்த வாக்கியங் களுக்குப் பாடனி விரிவுரையாளர் ஒரு பதிலும் கூறவில்லை. மெளனமாகப் பக்கத்தில் நடந்து வந்து கொண்டிருந்தார் அவர். அந்தச் சமயத்தில் சத்தியமூர்த்தியின் முகத்தை நிமிர்ந்து பார்ப்பதற்கே பயமாக இருந்தது அவருக்கு. உண்மை இந்த உதடுகளிலிருந்துதான் பிறந்து வருகிறது என்பதுபோல் அத்தனை அழகாகத் தன் சிவந்த உதடுகளைத் திறந்து சத்தியமூர்த்தி கொதிக்கக் கொதிக்க உணர்ச்சி வசப்பட்டுப்பேசியதைக் கேட்கப் பயந்தது தவிர அவன் முகத்தைப் பார்க்கவும் பயந்தார் அப்பாவியான அந்த தாவர இயல் விரிவுரையாளர். பேசிக்கொண்டே அவர்கள் இருவரும் பூபதியின் வீட்டுத் தோட்டத்தை அடைந்தார்கள். தோட்டத்துப் புல்வெளியின் இடையேயிருந்த செடி கொடிகளிலும் பெயர் புரியாத குரோட்டன்ஸ்களிலும் இயற்கையாகவே பல்வேறு நிறங்களில் பூத்துத் தொங்கும் ஒளிப்பழங்களைப் போல் வண்ண வண்ணப் பல்புகள் எரிந்து கொண்டிருந்தன. காம்பவுண்ட் கேட் அருகே தன் வரவை எதிர்பார்த்து ஆவலோடும் மலர்ந்த முகத்தோடும் பாரதி காத்துக் கொண்டிருப்பதைச் சத்தியமூர்த்தி கவனித்தான். தான் வருவதைப் பார்க்க வேண்டுமென்றே தனக்காக மட்டும் காத்துக் கொண்டிருந்தவள்போல் தான் உள்ளே வந்ததும் அந்தப் பெண் தோட்டத்து முகப்பிலிருந்து அப்பால் போய்விட்டதையும் அவன் பார்த்தான். தோட்டத்துப் புல்வெளியில் தூய வெள்ளை விரிப்புகளோடு விருந்து மேஜைகளும் நாற்காலிகளும் வரிசையாக நீண்டுகிடந்தன. கல்லூரி முதல்வர் வருகிறவர்களை வரவேற்றுக் கொண்டு நின்றார். விரிவுரையாளர்களையும், கல்லூரி அலுவலர் களையும் தவிர, மல்லிகைப்பந்தல் நகரப் பிரமுகர்கள் சிலரும் அந்த விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். மேசைவிரிப்புகளின் மேல் வெளேரென்று மின்னும் பீங்கான் கிண்ணங்களும், தட்டுக்களும், நடுநடுவே அலங்காரமாக மலர்க்குடுவைகளும் ஒரு பெரிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/249&oldid=595321" இலிருந்து மீள்விக்கப்பட்டது