பக்கம்:பொன் விலங்கு.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 271

வார்த்தைகளைக் கேட்டு அம்மா கோபத்தோடு தோள்பட்டையில் முகத்தை இடித்துக்கொண்டு அழகுகாட்டிவிட்டு உள்ளே போயிருந்தாள். வந்தவர்களும், அம்மாவும், கண்ணாயிரமும் எக்கேடும் கெட்டுப் போகட்டுமென்று வாசலிலிருந்தபடியே சிறுவனை அழைத்து, உள்ளேயிருந்து தட்டில் பூவும், தேங்காய், பழமும் எடுத்துக்கொண்டு வரச்சொல்லி அவனையும் துணைக்கு அழைத்துக்கொண்டு மீனாட்சி கோவிலுக்குப் புறப்பட்டு விட்டாள் அவள் வடக்குக் கோபுரத்தின் வழியாகக் கோவிலுக்குள் நுழைந்து ஆடி வீதியில் கிழக்கு நோக்கி நடந்து கொண்டிருந்தபோது மறுபடியும் மழை பிசுபிசுக்கத் தொடங்கியிருந்தது. அவளும் உடன் வந்திருந்த சிறுவனும் சாமி சந்நிதிக்குள் நுழைவதற்குள் மழை பலமாகவே வந்துவிட்டது. கோவிலுக்குள்ளும் கூட்டம் அதிகமாக இருந்தது. சாமி சந்நிதியில் தரிசனத்தை முடித்துக்கொண்டு மோகினி அம்மன் சந்நிதி முகப்புக்கு வந்தபோதில் கூட்டம் உள்ளே நுழையமுடியாதபடி நெருக்கமாக இருந்தது. அர்ச்சனைச் சீட்டு வாங்குவதற்குப் பையனை வரிசையில் நிற்கச் சொல்லிவிட்டுக் கிளிக்கூட்டு மண்டபத்தை ஒட்டினாற்போல் தயங்கி நின்றாள்.அவள், கூட்டிலிருந்த பல கிளிகளில் மிகவும் பெரிதாகிய பஞ்சவர்ணக்கிளி ஒன்று, வருகிறவர்கள் சொல்லித் தனக்குப் பழக்கப்படுத்திவிட்ட ஒரே ஒரு வார்த்தையாகிய, மீனாட்சி', 'மீனாட்சி என்ற பதத்தைக் கிள்ளைப் பேச்சாக மிழற்றிக் கொண்டிருந்தது. கிழக்குப் பக்கம் பொற்றாமரைக் குளத்துக்கு மேலே திறந்த வானம் இடியும் மின்னலுமாக மழைக்கோலம் பூண்டிருந்தது. மழை நிற்கிற வழியாயில்லை. பொற்றாமரைக்குளத்தின் படிகளில் தண்ணீர் வடிந்து பாயும் ஒசை ஒரே அளவான சுருதியோடு ஒலித்துக் கொண்டிருந்தது. மிகப் பெரிதாகக் கேட்ட இடி ஓசை ஒன்றின்போது கிளிக்கூட்டு மண்டபத்தில் அடைபட்டிருந்த பஞ்சவர்ணக்கிளி மேலே "படபடவென்று சிறகடித்துப் பறக்க முயன்று முடியாமல் மறுபடியும் சட்டத்தில் வந்தமர்ந்தது. அப்படிப் பறக்க முயன்று போய்த் தளர்ந்து மறுபடியும் சட்டத்திலேயே அமர்ந்துவிட்ட அந்தக் கிளியையும் தன்னையும் மனத்தில் ஒப்பிட்டுப் பரிதாபத்தை உணர்ந்தாள் மோகினி, 'நீயும் நானும் கூண்டிலிருந்து பறந்து போய்ச் சுதந்திரமாக வாழ முடியாது கிளியே காரணம் நீயும் நானும் பிறருடைய காட்சிக்குப் பண்டமாகிற அளவுக்கு அழகாயிருப்பதுதான். எங்கே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/273&oldid=595375" இலிருந்து மீள்விக்கப்பட்டது