பக்கம்:மகாபலிபுரத்து ஜைன சிற்பம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

பல இடங்களில் காணப்படுகின்றனவே. கங்காதரமூர்த்தியின் உருவம் இந்தச் சிற்பத்தில் ஏன் இடம்பெறவில்லை? கதைக்குப் புறம்பான யானை, நாகர்கள், தேவர்கள், தலையற்ற உடல்கள், தலைவணங்கி உட்கார்ந்திருக்கும் முனிவரின் உருவம், கோயில் இவைகள் ஏன் முக்கிய இடம் பெற்றிருக்கின்றன? இவைகளை எல்லாம் யோசிக்கும்போது, இந்தச் சிற்பக்காட்சி, சிலர் கருதுவது போல பகீரதன் தபசைக் குறிக்கவில்லை என்றும் வேறு ஏதோ கதையைக் குறிக்கிறதென்றும் தெரிகிறது.

அப்படியானால் இந்தச் சிற்பக்காட்சி எந்தக் கதையைக் குறிக்கிறது?

இந்தக் கேள்வி பல ஆண்டுகளாக என் மனத்தில் குடி கொண்டிருந்தது. நெடுநாட்களாகச் சரியான விடை எனக்குக் கிடைக்கவில்லை. கடைசியாக, ஜைன நூல்களைப் படித்தபோது இக்கேள்விக்கு விடை கிடைத்தது! இந்தச் சிற்பம் ஒரு ஜைனக் கதையைக் குறிக்கிறது என்பதை அறிந்தேன். அந்த ஜைனக் கதைக்கும் இந்தச் சிற்பத்திற்கும் பலவகையில் நல்லபொருத்தங்கள் இருப்பதைக்கண்டேன். மேலும் ஊன்றி நன்றாக ஆராய்ந்துபார்த்தபோது நிச்சயமாக இந்தச் சிற்பம் ஜைனக் கதையத்தான் குறிக்கிறது என்னும் உண்மையைக் கண்டேன். என் கருத்தை, தென் இந்திய புதைபொருள் ஆராய்ச்சி சங்கத்தில் (Archaeological Socety) (1947-ஆம் ஆண்டு ஜனவரி 21-ம் தேதி) பேராசிரியர், ராவ்சாகிப் A. சக்கரவர்த்தி நயினார் M. A. அவர்கள் தலைமையில் சுருக்கமாகப் படித்தேன். . அஜிதநாதசுவாமி என்னும் இரண்டாவது ஜைன தீர்த்தங்கரர் புராணத்தில் கூறப்படுகிற சகரசக்கரவர்த்தியின் கதை இந்தச் சிற்பக் காட்சியில் அமைந்திருக்கிறது என்று விளக்கினேன். இந்தச் சகரசக்கரவர்த்திக் கதை இராமாயணத்தில் கூறப்படுகிற சகரசக்கரவர்த்தியின் கதையல்ல. ஜைன புராணங்களில் கூறப்படுகிற ஒரு ஜைனக்கதையாகும் இந்தக் கதைக்கும் மகாபலிபுரத்துச் சிற்பத்துக்கும் பொருத்தங்காட்டுவதற்கு முன்பு, இந்தக்கதையை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். இந்தக் கதை தமிழில் ஸ்ரீ புராணத்திலும், ஜீவசம்போதனை என்னும் நூலிலும் சுருக்கமாகக்காணப்படுகிறது. இந்தியில் உள்ள திரிஸஷ்டி ஸலாகா புருஷ சரித்திரம் என்றும் நூலில் விரிவாகக் கூறப்பட்டிருக்கிறது. இந்த இந்தி நூலை Helen M. Johnson அம்மையார் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். Gaekwad's Oriental Series ஆக இது அச்சிடப்பட்டிருக்கிறது. அக்கதையைச் சுருக்கமாகக் கூறுகிறேன்