பக்கம்:மகாபலிபுரத்து ஜைன சிற்பம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

நாங்கள் உமது ஊழியர்களானோம். நவநிதிகளாகிய எங்கள் துணையைக்கொண்டு உமது விருப்பப்படி எல்லா இன்பங்களையும் துய்ப்பீராக, பெரியதாகிய கடல் நீர் வரண்டாலும் வரண்டுவிடும். எங்கள் நிதிச் செல்வம் ஒருபோதும் குறையாது. சக்கரவர்த்தியாகிய தங்களது கட்டளைப்படி ஏவல் செய்ய நாங்கள் காத்திருக்கிறோம். " என்று பணிந்து கூறின. இவ்வாறு பெறுதற்கரிய நவநிதிகளைச் சகரசக்கரவர்த்தி தமது புண்ணிய வசத்தினால் அடையப்பெற்றார்.

இந்த ஒன்பது வகையான செல்வங்களின் இயல்பாவன:— கைசர்ப்பநிதி, வீடுகள் பாசறைகள் கிராமங்கள் அரண்பொருந்திய நகரங்கள் முதலியவற்றை அமைத்துக்கொடுக்கும். பாண்டுகம் என்னும் நிதி நெல், கோதுமை, பருப்பு வகைகள் முதலிய தானியங்களையும் உணவுப் பொருள்களையும் வேண்டிய அளவு உண்டாக்கிக் கொடுக்கும். பிங்கல நிதி, ஆடவர்க்கும் பெண்டிர்க்கும் யானை குதிரை முதலிய பரிவாரங்களுக்கும் உரிய அணிகலன்களை அமைத்துக்கொடுக்கும். மகா பதுமம் என்னும் நிதி, வெண்மை கருமை செம்மை முதலிய பலவித நிறங்களையுடைய பட்டினாலும் பருத்தியினாலும் ஆன உடைகளை பலப்பல உருவத்தில் அமைத்துக் கொடுக்க வல்லது. காலம் என்னும் நிதியானது, இறந்த காலம் நிகழ் காலம் எதிர் காலம் என்னும் முக்கால நிகழ்ச்சிகளையும் அறிவிப்பதோடு, உழவு கைத்தொழில் முதலியவற்றின் பலாபலன்களையும் முன்னதாகவே தெரிவிக்க வல்லது. மகாகாளம் என்னும் நிதியானது முத்து, பவழம், பொன், வெள்ளி, இரும்பு முதலிய உலோகச் செல்வங்களை வேண்டிய அளவு அளிக்கவல்லது. - மானவம் என்னும் நிதியானது போருக்குரிய சேனைகளையும் யானைப்படை, குதிரைப்படை, தேர்ப் படைகளையும் ஆயுத தளவாடங்களையும் குறைவற அளிக்கவல்லது. சங்கநிதி குழல், யாழ் முதலிய இசைகளையும் நாடகம், பாட்டு, சிற்பம் ஓவியம், காவியம் முதலிய கலையின்பங்களை அளிக்கவல்லது. சர்வ ரத்தினம் என்னும் நிதியானது ஜீவரத்தினம் ஏழையும் அஜீவரத்தினம் ஏழையும் அளிக்கவல்லது. (ஜீவரத்தினம் ஏழாவன;— கிரகபதி, சேனாபதி, வில்வகர்மன், புரோகிதன், குதிரை, யானை, ஸ்திரீ என்பன. அஜீவரத்தினம் ஏழாவன:— சக்கரம், குடை, வாள், தண்டடம், சூடாமணி, தோல், காசிணி என்பன.) நவநிதிகளின் இயல்புகளையும் ஜீவ அஜீவரத்தினங்களின் இயல்பையும் ஜீவசம்போதனை என்னும் ஜைன நூலில் விரிவாகக் கூறப்பட்டிருக்கிறது. அதனை இந்நூலின் கடைசியில் சேர்த்திருக்கிறேன், ஆங்குக் காண்க.

இவ்வாறு, நவநிதிகளையும் அடைந்து சக்கரவர்த்தியாகச் செங்கோல் நடாத்தி அளவற்ற இன்ப சுகங்களை அனுபவித்து வருகிற சகர சக்கரவர்த்திக்கு அறுபதினாயிரம் பிள்ளைகள் பிறந்தார்கள். அப்பிள்ளைகளுக்கு சாகரர் என்பது பொதுப்பெயர். அதாவது சகரன் 'பிள்ளைகள் என்பது கருத்து. இவர்களில் மூத்த மகன் பெயர் ஜானு என்பது.